நேற்று காலை தொடங்கி இன்று அதிகாலை வரை பெய்த தொடர் கனமழையால் சென்னை மீண்டும் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் அடையாறு வழியாக பட்டினப்பாக்கம் அருகே சென்று கடலில் கலக்கிறது. அதேபோல் பூண்டி ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் கூவம் ஆறு வழியாக நேப்பியர் பாலம் அருகே கடலை சேர்கிறது.
அடையாறு மற்றும் கூவம் ஆற்றங்கரைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின்போது வினாடிக்கு சுமார் 18 ஆயிரம் கன அடி தண்ணீர் இரு ஆறுகளில் இருந்தும் வெளியேற்றப்பட்டது.
ஆனால் கடந்த இரண்டு நாட்களில் பெய்த பேய் மழையால் தற்போது நீர் திறப்பு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த இரண்டு ஆறுகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் பாலங்களை எட்டியுள்ளது. சைதாப்பேட்டையில் மேம்பாலத்தை கடந்து தண்ணீர் செல்கிறது.
இதேபோல், கூவம் ஆற்றிலும் அதிக அளவில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால், அமைந்தகரை பகுதியில் உள்ள பாரதிபுரம், பி.பி.கார்டன், எம்.எம்.காலணி உள்ளிட்ட பகுதிகளிலும், என்.எஸ்.கே நகர், நாதமுனி தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அண்ணாநகர் பகுதி தண்ணீரில் மிதக்கிறது. அண்ணா ஆர்ச்சில் இருந்து ரவுண்டா செல்லும் வழியில் உள்ள பாலத்தில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. இதனால் பாலத்தை கடந்து தண்ணீர் அதிக வேகத்தில் செல்ல முடியாமல் அண்ணாநகர் பகுதியில் புகுந்துள்ளது. இதனால் சாந்திகாலணி, நடுவங்கரை உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
0 comments:
Post a Comment