இடைவிடாது கொட்டித்தீர்க்கும் கன மழையால், சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. அடுக்குமாடி குடியிருப்புகளும் வெள்ளத்தில் மூழ்கின. பல பகுதிகளிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பால் வினியோகம் பெருமளவு முடங்கியது.
இதை வைத்து, பால் நிறுவனங்கள், வியாபாரிகள் பால் விலையை இஷ்டம்போல் உயர்த்தி விற்றனர். சோழிங்கநல்லுார், துரைப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில், 18 ரூபாய் முதல், 25 ரூபாய் வரை விலை உள்ள, அரை லிட்டர் பால் பாக்கெட், 50 ரூபாய் வரை விற்கப்பட்டது. சில இடங்களில், தனியார் நிறுவன பால் ஏஜென்ட்களே, சாலை சந்திப்புகளில் வைத்து, இவ்வாறு விற்றனர். பள்ளிக்கரணை பகுதியில், அரை லிட்டர் பால் பாக்கெட், 100 ரூபாய் வரை விற்கும் கொடுமை நடந்தது.
குடிநீர் கேன் ரூ.75: வழக்கமாக, 20 லிட்டர் குடிநீர் கேன், 30 - 35 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இரண்டு நாட்களாக, சென்னையின் பல பகுதிகளில், 40 - 50 ரூபாய் வரை விற்பனையானது. வெள்ளம் சூழ்ந்து மக்கள் தத்தளித்த பகுதிகளில், ஒரு கேன், 75 ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளது. அதுபோல், காய்கறிகளும், மூன்று மடங்கு விலை வைத்து விற்கப்பட்டது. 'இதுபோன்ற இக்கட்டான சூழலில், மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். அதை விட்டு, இதுபோன்று லாபம் ஈட்டும் நோக்கில் வியாபாரிகள் ஈடுபட வேண்டாம்' என, வணிகர் சங்கங்கள், தமிழ்நாடு பால் முகவர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
0 comments:
Post a Comment