பல தசாப்தங்கள் தீர்க்கப்படாது புதைந்து கிடக்கும் வன்னி மக்களின் பிரச்சினைகளை இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம் எனவே, எமது மக்களின் உண்மையான தேவைகளை இனங்கண்டு, அவற்றை முன்னுரிமைப்படுத்தி, அவற்றைத் தீர்க்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற தனது கன்னி உரையில் கே கே மஸ்தான் குறிப்பிட்டார்
மேலும் இவர் தெரிவிக்கையில்
கௌரவ சபாநாயகர் அவர்களே!
2009 இல் மூன்று தசாப்த உள்நாட்டு யுத்தம் நிறைவுற்று சுமார் ஐந்தரை (5½) வருடங்கள் கடந்த நிலையில் யுத்தத்தின் கொடூரத்தை தமது கண்களால் கண்ட அதன் வேதனைகளை உணர்ந்த மூன்று தலைமுறைகள் தமது சோகங்களை வரலாறாக முடக்கிவைத்துவிட்டு ஒன்றிணைந்த இலங்கையில் எமது தாய்நாட்டின் ஒளிமயமான எதிர்காலம் வேண்டியும் வன்னி வாழ் தமிழ் முஸ்லிம், சிங்கள மக்களுக்கு விடிவு வேண்டியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனிக்கு வாக்குகளை வழங்கி, என்னை பாராளுமன்றத்துக்கு தொிவுசெய்து இன்று இங்கு பேசுவதற்கான சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொடுத்த உண்மைக்கும், நேர்மைக்கும், நியாயத்துக்கும் மதிப்பளிக்கும் அன்பார்ந்த வன்னி மக்களுக்கு முதலில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தொிவித்துக் கொள்கிறேன்.
புகழ் அனைத்தும் அல்லாவுக்கே!
மக்கள் சேவை என்பது எனக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. நான் எனது தந்தை வழியில் பயிற்றப்பட்டவன், அவர் பாராளுமன்றம் வராமலேயே யுத்த முனையில் இருந்து கொண்டு ஒரு தனியாளாக சமூக சேவையில் ஈடுபட்டு பிரதேசத்தின் தமிழ், முஸ்லிம் சிங்கள மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவர் வழியில் மக்களுடன் மக்களாக இருந்து சேவையாற்றிய என்னை இன்று வன்னி மக்கள் தமது பிரதிநிதியாகக் தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே இப்போது எனது பணி சமூகக் கடமையாக மாறியுள்ளது.
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது பாராளுமன்றத் பொதுத் தேர்தலில் அக்கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாடு முழுவதுக்குமான, ஒரே ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே ஒரு சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும், இன, மத, மொழி பேதமின்றி அனைத்து மக்களுக்கும் சேவையாற்ற நான் கடமைப்பட்டுள்ளேன்.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
2016 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டதை இந்த அவையில் சமர்பித்த நிதி அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்கள் தனது உரையில்
'நாம் ஒரு சில கோடீஸ்வரர்களுக்கு மாத்திரம் தளத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதனை நோக்கமாகக் கொள்ளவில்லை. மில்லியன் கோடீஸ்வரர்களை உருவாக்குவதற்கான வழியை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்.' எனக் குறிப்பிட்டார்.
உண்மையில் பல்லின, பல் சமய மிக நீண்டகால வரலாற்றுப் பின்னணியையுடைய எமது நாட்டை அனைத்து மக்களும் எவ்வித பாகுபாடுகளுமின்றி வானவில் போன்று பிரகாசிக்கக் கூடிய பொருளாதராரச் செழிப்புள்ள அபிவிருத்தியடைந்த ஒரு நாடாக மாற்றியமைப்பதே எமது இலக்காக இருக்க வேண்டும்.
அதிமேதகு ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமர் குறிப்பிட்டது போன்று, எமது எதிர்காலச் சந்ததியினருக்கு சிறந்த வாய்ப்புக்களை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டே இந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
உண்மையில், இந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட ,
• ஒரு மில்லியன் வேலை வாய்ப்புக்களை உருவாக்குதல்
• வருமான மட்டங்களை விருத்தி செய்தல்
• கிராமியப் பொருளாதாரங்களை அபிவிருத்தி செய்தல்
• கிராமிய மற்றும் தோட்டத் துறைகளிலும், நடுத்தர வகுப்பைச் சார்ந்தவர்களினதும், அரசாங்க ஊழியர்களினதும் ஆதன உரிமையை உறுதிப்படுத்தல்
• பரந்த மற்றும் உறுதி வாய்ந்த நடுத்தர வகுப்பினரை உருவாக்குதல்
என்பன மிகவும் வரவேற்கத்தக்க விடயங்களாகும்.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
வன்னி வாழ் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் பிரதிநிதி என்ற வகையில், இந்த வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட கிராமியப் பொருளாதார மீளெழுச்சி நடவடிக்கையுடன் தொடர்பான விவசாயம், பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி, பாற்பண்ணைக் கைத்தொழில், கடற்றொழில், கோழிப் பண்ணை, மற்றும் இவற்றுடன் சார்ந்த பதணிடல் மற்றும் தொழில் முயற்சிகள் மூலம் எமது மக்கள் பெரும்பாலும் பயனடைவார்கள் என நம்புகின்றேன்.
குறிப்பாக இந்த வரவு செலவுத்திட்டத்தில்
• நவீன தொழில்நுட்பத்துடனான முழுமையான நெல் களஞ்சியசாலை ஒன்றை மன்னார் மாவட்டத்தில் நிறுவுதல்
• அனுராதபுரம், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை இணைத்து விவசாய கால்நடை மற்றும் மீன் பதப்படுத்தும் கைத்தொழில் மையங்களை உருவாக்குதல்,
• வவுனியாவில் புதிய பொருளாதார வலயமொன்றினை நிறுவுவதற்கு ரூபா 200 மில்லியன்களை ஒதுக்கீடு செய்துள்ளமை,
• எமது பிரதேசத்தின் கல்வி மேம்பாட்டுக்காக வவுனியாவில் விவசாய பீடத்தை அமைத்தல்
• யாழ்ப்பாணம் புகையிரதப் பாதையில், மாகோ மற்றும் வவுனியா பாதைகளின் வேகத்தினை மேம்படுத்துவதற்காக ரூபா 2,000 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்தல்
• தம்புள்ளை, பொலநறுவை, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தை இணைக்கும் வகையிலான வடகிழக்கு அதிவேகப் பாதையை விரிவாக்குதல் போன்ற,
பல சிறந்த திட்டங்கள் மூலம் வன்னி மக்களும் பயனடைவார்கள். இவை அவர்களையூம் நாட்டின் தேசிய பொருளாதாரத்தின் பங்குதாரர்களாக உள்வாங்கி தலை நிமிர்ந்து வாழும் ஒரு சமூகமாக மாற்றியமைக்கும் என நான் நம்புகிறேன்.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
ஒரு பாரிய அபிவிருத்தி இலக்குடன் பயணிக்கும் எமது நாட்டின் அனைத்து முயற்சிகளுக்கும் பூரண ஆதரவை வழங்குவதுடன், அதில் முக்கிய பங்குதாரதாக முன்னின்று உழைக்க அனைத்து வன்னி மக்களும் ஆவலாய் உள்ளனர்.
இருப்பினும் யுத்த சூழ்நிலையில் வன்னி மண்ணிலிருந்து காரணமின்றியே அநியாயமாக வெளியேற்றப்பட்ட தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களும் உள்நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றமை மிகவும் மன வேதனைக்குரிய விடயமாகும்.
இன நல்லிணக்கத்தை முழுமையாக அடைவதில் உள்ள தடங்கள் மற்றும் தாமதங்கள் குறிப்பாக அதன் பிரதான அம்சங்களான புணர்நிர்மானம் செய்தல், உரிய இழப்பீடுகளை வழங்கள், நீதி வழங்கள், அரசியல் கைதிகளுக்கான பொது மன்னிப்பு வழங்கள் மற்றும் உரிய வாழ்வாதார வசதிகளுடன் அனைத்து மக்களையும் கௌரவமான முறையில் மீள் குடியேற்றல் எனும் விடயங்கள் காரணமின்றியே தாமதப் படுத்தப்பட்டு வருகின்றமை, பிரதேச அபிவிருத்தியையும், மக்களது நாளாந்த வாழ்வையும் பொிதும் பாதித்துள்ளது.
இன்று யுத்தம் முடிவடைந்த நிலையில், பல ஆயிரக்கணக்கான வன்னி மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர முடியாமல் அல்லது குடியமர்த்தப்படாமல் உள்ளனர். அதே போல யுத்த சூழலில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கும் அதிகமான இளைஞர்கள் இது வரை எவவ்வித விசாரனைகளுமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். மேலும், இனம் தொியப்படாத முறையில் கடத்தப்பட்ட தமது உறவுகள் பற்றிய எவ்வித தகவல்களும் இல்லாத சோகத்துடன் வாழும் நுற்றுக்கணக்கான குடும்பங்களும் வன்னியல் வாழ்கின்றனர். குடும்பத் தலைவர்களை இழந்து, இன்று விதவைகளாக பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தமது பிள்ளைகளின் நலனுக்காக வாழும் குடும்பத் தலைவிகளைகளின் அர்ப்பணிப்பையும் நாம் மறந்து விட முடியாது. இந்த சோகங்கள் வன்னி மக்களை மாத்திரமல்ல மனிதாபிமானத்துடனும் உண்மையான தேசிய உணர்வுடனும் இந்தப் பிரச்சினையை நோக்கும் அனைவரையும் புண்படுத்தும் விடயங்களாகும்.
எனவே, எமது மக்களின் உண்மையான தேவைகளை இனங்கண்டு, அவற்றை முன்னுரிமைப்படுத்தி, அவற்றைத் தீர்க்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
கௌரவ நிதியமைச்சர் குறிப்பிட்டதைப் போன்று, அதாவது
'உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீள் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக நாம் எடுப்பதுடன், ஏற்கனவே மீள் குடியேறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளையூம் அடிப்படைத் தேவைகளையூம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்காக முறையான சுகாதார வசதிகள், சுத்தமான குடிநீர் மற்றும் மின்சாரம் என்பவற்றுடன் மன்னார் மற்றும் முல்லைதீவு மாவட்டங்களில் 20,000 வீடுகளை நிர்மாணிப்போம்...'
என இந்த வரவு செலவுத் திட்டத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது மிகவும் வரவேற்கத் தக்க விடயமாகும். உண்மையில் இன்று அங்கு இதைவிட பலமடங்கு வீடுகளின் தேவை உள்ளது. எனவே இந்த வரவு செலவுத் திட்டத்தின் உண்மையான இலக்குகளை அடைவதாயின், முழு நாடும் ஒன்றிணைந்து உள்நாட்டில் வாழும் உரிமை மறுக்கப்பட்ட அனைத்து மக்களையும் பூரண வசதிகளுடன் குடியமர்த்த அரும் பாடுபட வேண்டும். அதன் காரணமாக நிச்சயமாக எதிர்பார்த்த பரந்த மற்றும் உறுதி வாய்ந்த நடுத்தர வகுப்பினரை உருவாக்கவும் முடியும்.
இது தவிர, சிறந்த குடிநீர் வசதியின்மை, உட்கட்டமைப்பு வசதிகள் இன்மை, வாழ்வாதார உதவிகளின்மை, தொழில் வாய்பின்மை, கல்வி, பொது வசதிகள் எனப் பல பிரச்சினைகளும் வன்னிப் பிரதேசத்தின் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய முன்று மாவட்டங்களிலும் காணப்படுகின்றன.
வவுனியா மாவட்டத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2014,ல் 182 இலிருந்து 2015 இல் 286 ஆக சுமார் 57% ஆல் அதிகரித்துள்ளது. இது மிகவும் அபாயகரமான போக்காகும். நீரின் கல்சியம் அளவு மக்கள் உடல் ஆரோக்கியத்தைப் பொிதும் பாதித்துள்ளது.
இந்த வகையில் அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் முயற்சியினால் ஒரு பாரிய சிறுநீரக வைத்தியசாலை வன்னியின் எல்லைப் பகுதியில் நிறுவப்படுகின்றமை காலத்தின் தேவையாகும். அதே போல அதற்குப் பரிகாரமாக வன்னியின் அனைத்துக் குடியிருப்புக்களுக்கும் தூய நீரை வழங்க உரிய ஏற்பாடுகள் எடுக்கப்பட வேண்டும்.
குறிப்பாக வன்னியில் யுத்தத்துக்குப் பின்னர் அதாவது 2010களில் மக்களை மீள் குடியேற்றிய குடியேற்றப் பகுதிகளின் வீதிகள் திருத்தப்பட்டுள்ளன.ஆனால் வவுனியா நாகரை மையமாகக் கொண்ட மக்கள் செறிவாக வாழும் குடியிருப்புச் சார்ந்த வீதிகள் மிக மோசமான நிலையில் உள்ளன. குறிப்பாக சாலம்பைக்குளம், பூவரசங்குளம், குறுக்கலூர்எனும் கிராமங்களை இணைக்கும் வவுனியா பரயானாங்குளம் சந்தி வரையுள்ள A30 வீதி, நெலுக்குளம் சந்தியிலிருந்து சூடுவெந்தபுலவு, உலுக்குளம், வீரபுரம் ஊடாக மதவச்சி மன்னார் வீதியை இணைக்கும் டீ325 எனும் வீதி மற்றும் வாரிக்குட்டியூர், தம்பன்குளம் கிராமங்களை இணைக்கும் பூவரசங்குளம் – செட்டிக்குளம் வீதி, மாமடுவ, போகஸ்வெவ பராக்கிரமபுர ஆகிய கிராமங்களை இணைக்கும்டீ442 வீதிவெளிக்குளம் - வெலிஓய, போன்ற பல பிதான வீதிகள் செபப்பனிடப்பட்டு சீர்செய்ய வேண்டிய தேவையும் உள்ளது.
கௌரவ சபாநாயக் அவர்களே! பல தசாப்தங்கள் தீர்க்கப்படாது புதைந்து கிடக்கும் வன்னி மக்களின் பிரச்சினைகளை இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் தீர்வு காண்பது என்பது தனி ஒருவரால் செய்ய முடியுமான விடயமல்ல, மாறாக முழுமையான அரச இயந்திரமும், மக்கள் அமைப்புக்களும் அரசியல் தலைமைகளும் இணைந்து பணியாற்றினால் மாத்திரமே உண்மையான தீர்வை அடைய முடியும் என நான் நம்புகின்றேன்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடிவு கிடைக்க, தேசிய அரசாங்கத்தின் அபிவிருத்திப் பயணத்தில் இணைந்து செயற்பட தமிழ், முஸ்லிம், சிங்கள அரசியல் தலைமைகள் மற்றும் பிரதேச அரசியல்வாதிகள் தமது கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றிணைந்து ஒற்றுமையாகப் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனிடத்தில் பிரார்த்தித்தவனாக எனது கன்னி உரையை நிறைவு செய்து கொள்கிறேன்.
நன்றி!
0 comments:
Post a Comment