வடமாகாண மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறுகின்றோம். ஆனால் எமது கருத்துக்களை அரசாங்கம் மதிப்பதாகவோ அல்லது செயற்படுத்துவதாகவோ தெரியவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நோர்வே தூதுவருக்கு எடுத்துரைத்துள்ளார்.
யாழிற்கு விஜயம் மேற்கொண்ட நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் தொர்பிஜோன் ஹஸ்டட்சேதர் (thorbjorn gaustadsaether) நேற்று வியாழக்கிழமை மாலை வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் முதலமைச்சரை சந்தித்துக் கலந்துரையாடினார்.
அந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கத்தினைக் கொண்டு வருவதற்கு வடகிழக்கு மாகாண மக்களின் பங்கு மிகப்பெரியதாக இருந்தது.
அந்த வகையில் இந்த அரசாங்கத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் என கூற முடியாது.
எனினும் முன்னைய காலத்திற்கும், தற்போதைய காலத்திற்கும் இடையில் என்ன வித்தியாசம் இருக்கின்றது என அரசாங்கத்திடமும், நோர்வே அரசாங்கத்திடமும் கேட்க விரும்புகின்றேன் என முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கம் அரசியல் கைதிகள் குறித்து காத்திரமான நடவடிக்கையினை எடுத்திருக்கலாம்.
ஆனால், பிணையில் விடுவிப்பதாக ஜனாதிபதி கூறியிருந்தாலும், ஒருவருக்கு 10 லட்சம் ரூபா பெறுமதியான 2 ஆள்பிணை என கூறி, ஒரு கையால் தந்து மறு கையால் எடுப்பது போன்று செயற்பட்டு விட்டார்கள்.
அது எமக்கு மன வேதனையை அளிக்கின்றது என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
நல்லிணக்கத்திற்கான ஆக்கபூர்வமான அடிப்படை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தினை நோர்வே தூதுவரிடம் எடுத்துக் கூறினேன் என்றார்
அத்துடன் ஜனநாயக முறையினை கொண்டு வந்துள்ள சந்தர்ப்பத்தில் அதனைக் கைவிடாமல் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
tamil news net
0 comments:
Post a Comment