யாழ் பல்கலைக்கழகத்தின் கௌரவம் மிகவும் முக்கியமானது. அது பாதுகாக்கப்பட வேண்டுமானால், பல்கலைக்கழக மாணவர்கள் நீதிமன்ற குற்றக் கூண்டில் நிற்கக் கூடாது என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். இது தொடர்பில் பெற்றோர்களும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அபாயகரமான ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் பெற்றோல் குண்டு, வாள், பொல்லு மற்றும் ஆயுதங்களுடன் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உட்பட 10 இளைஞர்களை சுன்னாகம் பொலிஸார் கைது செய்திருந்தனர். மல்லாகம் நீதிமன்றம் இவர்களை விளக்கமறியலில் வைத்து விசாரணைகளை நடத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த இளைஞர்களை பிணையில் விடுமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை மல்லாகம் நீதவான் நிராகரித்திருந்தார். இதனையடுத்து, கைது செய்யப்பட்டிருந்த 2 பல்கலைக்கழக மாணவர்களின் கல்வியையும் எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு, இவர்களுக்கு பிணை வழங்க வேண்டும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. கடந்த 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த, வழக்குத் தவணையின்போது, இந்த, மேன் முறையீட்டு பிணை மனு மீதான விசாரணையை, முடிவுக்குக் கொண்டு வந்தபோதே நீதிபதி இளஞ்செழியன் இந்த எச்சரிக்கையையும், அறிவுறுத்தலையும் விடுத்துள்ளார். அபாயகரமான ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்க மறுத்து, அவர்களை உள்ளே தள்ளியிருந்த மல்லாகம் நீதிமன்றம் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக அரச பகுப்பாய்வு திணைக்களத்தை நாடியிருந்தது. கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டிருந்த பெற்றோல் குண்டை (நேர்த்தியாக பெற்றோல் அடைக்கப்பட்ட போத்தல் குண்டு) ஆய்வு செய்து, அது அபாயகரமான ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் வருகின்றதா என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரச பகுப்பாய்வாளருக்கு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கமைவாக நடத்தப்பட்ட ஆய்வில், இந்த பெற்றோல் குண்டு அபாயகரமான ஆயுதங்களின் பட்டியலில் அடங்கவில்லை என அரச பகுப்பாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்திருந்த அறிக்கையையடுத்து, சந்தேக நபர்கள் 10 பேரையும் மல்லாகம் நீதவான் சதீஸ்கரன் பிணையில் செல்ல அனுமதித்திருந்தார். இந்தத் தகவலை மேன்முறையீட்டு பிணை மனு வழக்குத் தவணையின்போது, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களின் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். மல்லாகம் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் பத்து பேருக்கும் பிணை வழங்கப்பட்டிருப்பதனால், மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த தமது பிணை மனுவை கைவாங்குவதற்கு நீதிமன்றத்திடம் அந்த சட்டத்தரணிகள் அனுமதி கோரியிருந்தனர். அப்போது யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் பெற்றோர்களும் நீதிமன்றத்தில் சமுகமளித்திருந்தனர். சட்டத்தரணிகளின் விண்ணப்பத்தை ஏற்று, இந்த பிணை மனு மீதான விசாரணையை முடிவுக்குக் கொண்டு வந்த நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்ததாவது – ரவுடித்தனம், தெருச் சண்டித்தனம், வாள்வெட்டு, கோஷ்டி மோதல் போன்ற பொது அமைதியைக் குலைக்கின்ற சமூக விரோதச் செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது. இளைஞர்கள் கல்வி கற்பதற்காகவே, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்குச் செல்கின்றனர். அவர்கள் தெருச் சண்டித்தனத்தில் ஈடுபட முடியாது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழ மாணவர்களாக இருக்கும் இரண்டு பேர், தெருவில் நின்ற மற்ற இளைஞர்களுடன் பெற்றோல் குண்டு பொல்லு வாள் மற்றும் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டமை பாரதூரமான விடயமாகும். எனவே, யாழ் பல்கலைக்கழகத்தின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டியது முக்கியம். அது, அங்கு பயிலும் மாணவர்களின் முக்கிய பொறுப்பாகும். அந்த கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டுமானால், பல்கலைக்கழக மாணவர்கள் நீதிமன்றத்தின் குற்றக் கூண்டுகளில் நிற்கக் கூடாது. அவர்கள் தமது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும். இது விடயத்தில் பெற்றோரும் அசமந்தமான போக்கில் இருக்க முடியாது. அவர்களும் தமது பிள்ளைகள் குறித்து கூடிய கவனம் எடுத்துச் செயற்பட வேண்டும் – என்றார்.
0 comments:
Post a Comment