இம்முறை நான் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானவுடன் ஆண்டு தோறும் நவம்பர் 27 ஆம் திகதி அன்று அரச அனுமதி பெற்று மக்களுடன் இணைந்து மாவீரர்களுக்கு தீபம் ஏற்றுவேன் என சிறீ ரெலோக் கட்சியின் செயலாளர் நாயகமான ப. உதயராசா கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் வவுனியா சிதம்பரபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிப் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இம்முறை நிச்சயம் வன்னி மாவட்டத்தில் இருந்து தமிழ் அமைச்சர் ஒருவர் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது. ஏனெனில், வன்னி மாவட்டம் நாட்டின் ஏனைய மாவட்டங்களை விட மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. அதனை நீண்டகால நோக்கில் திட்டமிட்டு திறம்பட அபிவிருத்தி செய்ய வேண்டியது மிக அவசியமானதாகும்.
இவ்வளவு காலமும் நாங்கள் மக்களுக்கு செய்த நல்ல சேவைகளுக்கான பலாபலன்கள் எமக்கான ஆதரவாக ஒன்று திரண்டுள்ளது. குறிப்பாக இளைய சமுதாயம் எம் பின்னால் அணி திரண்டுள்ளதைப் பார்க்கும் போது மிகுந்த சந்தோசமாக உள்ளது.
இம்முறை நான் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானவுடன் ஆண்டு தோறும் நவம்பர் 27 ஆம் திகதி அன்று அரச அனுமதியுடன் மாவீரர்களுக்கு தீபம் ஏற்றுவேன். இதனை உறுதியாக இன்று மக்கள் முன்னிலையில் கூறுகின்றேன்.
நீண்டகாலமாக காணாமல் போனோரின் உறவுகள் தொடர்ச்சியாக பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இன்று வரை அவர்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வு வழங்கப்படவில்லை, என்பதுடன் காணாமல் போனவர்களை மீட்கும் நடவடிக்கையையும் யாரும் செய்யவில்லை. நான் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானவுடன் காணாமல் போனோர் சிறைகளில் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் அதனை கண்டறிந்து சிறையை உடைத்து நிச்சயம் மீட்பேன் என்றார்.
0 comments:
Post a Comment