வடமாகாண கூட்டுறவு அமைச்சின் ஏற்பாட்டில் பனை அபிவிருத்தி தொடர்பான ஆய்வரங்கு நேற்று செவ்வாய்க்கிழமை (28.07.2015) யாழ் நகரில் உள்ள கிறீன் கிறாஸ் விடுதியில் நடைபெற்றுள்ளது.
வடமாகாண கூட்டுறவு அமைச்சு கடந்த 22 ஆம் திகதி தொடங்கி 28 ஆம் திகதி வரையான பனை அபிவிருத்தி வாரத்தில் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே, பனை அபிவிருத்தி வாரத்தின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை பனை அபிவிருத்தி ஆய்வரங்கை பனை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இந்த ஆய்வரங்கு, காலை மாலை என இரு அமர்வுகளாக இடம்பெற்றுள்ளது. இதில் பேராசிரியர்.சு.மோகனதாஸ், பேராசிரியர். கு. மிகுந்தன், கலாநிதி.சீ.வசந்தரூபா, கலாநிதி. எஸ். ஜே. அரசகேசரி, கலாநிதி க. பாலகுமார் உட்பட பல வளவாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
பனம்பழம் மற்றும் ஒடியல் மாவின் கசப்புத் தன்மையை நீக்குவது, பனைசார் உற்பத்திப் பொருட்களின் தரத்தை மேம்படுத்துவது, பனம்பொருட்களின் மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து இயல்புகளை உணவு உற்பத்திகளில் சேர்ப்பது, பனை மரங்களை புதிய வழிமுறைகளில் இனம் பெருக்குவது, பனைசார்ந்த தொழிலாளர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது உட்படப் பனையுடன் தொடர்புபட்ட பல்வேறு தரப்புகளில் ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
பனை எங்கள் சூழல், பனை எங்கள் பண்பாடு, பனை எங்கள் பொருளாதாரம் என்பதே பனை அபிவிருத்தி வாரத்தின் கருப்பொருளாகும்.
இக்கருப் பொருளுக்கு அமைவாக பனை வளத்தை உச்சப் பயன்பாட்டுக்கு உட்படுத்துவதற்கு வேண்டிய முயற்சிகள் மற்றும் ஆய்வுகளை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பான திட்டம் ஒன்றை ஆய்வாளர்கள் வடக்கு மாகாண சபையிடம் விரைவில் கையளிப்பது எனவும் இந்த ஆய்வரங்கில் முடிவாகியுள்ளது.
0 comments:
Post a Comment