இலங்கை தீவின் மூத்த தமிழ் ஊடகவியலாளர்களில் ஒருவர் தனபாலசிங்கம். அவர் சில நாட்களுக்கு முன் தனது முகநூல் பக்கத்தில் பின்வருமாறு எழுதியுள்ளார்….
“வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் ஜனாதிபதி தேர்தலில் வழமையாக தமக்கு விருப்பமான ஒரு வேட்பாளரை தெரிவு செய்வது என்பதை விடவும் நமக்கு விருப்பம் இல்லாத ஒரு வேட்பாளரின் தோல்வியை உறுதி செய்வதற்காகவே தமது வாக்குரிமையை பயன்படுத்துகிறார்கள். அவர்களை அவர்களுடைய விருப்பப்படி வாக்களிக்க விடுவதே தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரை உணர் திறன் மிக்கதாக இருக்கும். தமிழ் மக்கள் விவேகமாக முடிவெடுப்பார்கள்”.
தனபாலசிங்கம் மட்டுமல்ல பெரும்பாலான கூட்டமைப்பு ஆதரவாளர்களும் அப்படித்தான் கூறுகிறார்கள். ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை தேர்தலில் முன் நிறுத்துவதை எதிர்க்கும் பலரும் அப்படித்தான் கூறுகிறார்கள். ராஜபக்சவை தோற்கடிக்க வேண்டும் என்று விரும்பும் எல்லாரும் அப்படித்தான் கூறுகிறார்கள். ஐந்து கட்சிகளால் கையெழுத்திடப்பட்ட 13 அம்சங்கள் அடங்கிய ஆவணத்தை எதிர்க்கும் பலரும் அப்படித்தான் கூறுகிறார்கள். தமிழ்ப் பகுதிகளில் நடந்து வரும் பெரும்பாலான சந்திப்புகளில் மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலரும் அப்படித்தான் கூறுகிறார்கள். அதாவது மக்களை அவர்களுடைய விருப்பப்படி வாக்களிக்க விடுங்கள் என்று. ஏனெனில் தமிழ் மக்கள் தெளிவாக முடிவெடுத்து வாக்களிப்பார்கள் என்று.
இங்கு தமிழ் மக்களின் தெளிவு என்று கருதப்படுவது என்ன ? அது 2009இல் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை தோற்கடித்த ராஜபக்ச குடும்பத்தை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். தமிழ் பொதுப்புத்தி அப்படித்தான் சிந்திக்கிறது. எனவே தமிழ் மக்களை அவர்களுடைய விருப்பப்படி வாக்களிக்க விடுங்கள் என்று கூறும் ஒவ்வொருவரும் சஜித் பிரேமதாச வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறவர்கள்தான்.
ஐந்து கட்சிகள் கையெழுத்திட்டு உருவாக்கிய பொது ஆவணத்தை சஜித் கண்டுகொள்ளவே இல்லை. தபால் மூல வாக்கெடுப்பு முடியும் வரை பொது ஆவணத்தை குறித்து அவர் உத்தியோகபூர்வமாக எதையும் கூறி இருக்கவில்லை. அதேசமயம் கோத்தபாய அதை நிராகரித்துவிட்டார். அனுர அதில் ஒரு பகுதியை ஏற்றுக் கொள்வதாகத் தெரிகிறது. பொது ஆவணத்திற்குரிய பதிலை சஜித் நேற்று முன்தினம் வெளியிட்ட அவருடைய தேர்தல் அறிக்கையில் கூறுவார் என்று எப்படி எதிர்பார்த்திருக்கலாம்? ஏனெனில் தமிழ் மக்களின் கோரிக்கைகளை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டால் அவர் தென்னிலங்கையில் தோற்று விடுவாரே? எனவே அவரோடு ரகசிய உடன்படிக்கைதான் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவருடைய தேர்தல் அறிக்கை வரும் வரை முடிவெடுப்பதை ஓத்திவைக்கும்படி கூட்டமைப்பு பல்கலைக் கழக மாணவர்களிடம் கேட்டதை எப்படி விளங்கிக் கொள்வது?
தேர்தல் அறிக்கைகளை பொறுத்தவரை கோத்தபாயவை விடவும் சஜித் அதிகம் வாக்குறுதிகளை வழங்குகிறார். ஆனால் இனப்பிரச்சினை தொடர்பில் வெளிப்படையான அல்லது துலக்கமான வார்த்தைகளில் அந்த அறிக்கை கருத்துக் கூறவில்லை. அதற்கு பொழிப்புரை தேவைப்படுகிறதா? இப்படிப் பார்த்தல் சஜித்தை விடவும் கோதபாய தெளிவாகவும் வெளிப்படையாகவும் பேசுகிறார். அவர் தமிழ்
வாக்குகளைக் கவர வேண்டும் என்று பெரிதாக்க கஸ்ரப்படவில்லை. தனிச்சிங்கள வாக்குகளையே அவர் அதிகம் குறி வைக்கிறார. அவருடையது யுத்தவெற்றிவாதம். அதற்கு முகமூடி போட முடியாது.
ஆனால் தமிழ் வாக்குகளில் தங்கியிருக்கும் சஜித்தோ மங்கலான மூட்டமான வார்த்தைகளால் கதைக்கிறார். தான் வாக்குறுதி வழங்கா விட்டாலும் தமிழ்
மக்கள் தனக்கே வாக்களிப்பார்கள் என்று நம்புகிறார். தமிழ் மக்களோடு ஏதும் உடன்பாட்டுக்கு வந்தால் அது தென்னிலங்கையில் தன்னைத் தோற்கடித்து விடும் என்பதை ஒரு வாய்ப்பான சாட்டாக வைத்துக் கொண்டு அவரும் தனிச் சிங்கள வாக்குகளை இழந்துவிடாதிருக்கப் பாடுபடுகிறார்.
இவ்வாறான ஒரு பின்னணியில் சஜித் பிரேமதாச வந்தால் ஜனநாயகம் செழிக்கும் என்பது ஒர் ஊகம் மட்டுமே. தவிர ஒர் ஆபத்தும் உண்டு. அது என்னவெனில் சஜித் மேற்கிற்கும் இந்தியாவுக்கும் நெருக்கமாக இருப்பார். அவர் அபிவிருத்தி மைய இனப்படுகொலையை முன்னடுப்பாராக இருந்தால் அதை மேற்கும் தடுக்காது இந்தியாவும் தடுக்காது.
அதற்காக ராஜபக்ச வர வேண்டுமென்று இக்கட்டுரை கூறவரவில்லை. மாறாக சஜித்தை ஆதரிப்பது என்றால் அதை நிபந்தனையோடு செய்ய வேண்டுமென்று இக்கட்டுரை கேட்கிறது. ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை முன்னிறுத்தினால் அந்த நிபந்தனை ஒரு முழுப் பேரமாக மாறும். அப்பொழுது தமிழ் மக்கள் தமது முதலாவது விருப்பு வாக்கை கொள்கைக்கும் (தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கும்) இரண்டாவது விருப்பு வாக்கை தந்திரோபாயமாக முடிவெடுத்தும் வழங்கலாம்.
ராஜபக்ஷவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு சஜித் பிரேமதாசவை கொண்டுவர முடியாது. தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து தந்திரோபாய ரீதியாகவும் உத்தி பூர்வமாகவும் சிங்கள வேட்பாளர்களோடு ஒரு பேரத்தை வைத்துக் கொள்ள வேண்டுமென்று இக்கட்டுரை கேட்கிறது.
ஆனால் கொடுமை என்னவென்றால் அப்படி ஒரு பேரத்தை முன்வைக்கும் நிலையில் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் காணப்படவில்லை. அவர்களுக்கு பேர நரம்பே கிடையாது? அதனால் இப்பொழுது ஜனாதிபதித் தேர்தல் களத்தை பொறுத்தவரை தமிழ்ப்பேரம் இறங்கிக் கொண்டிருப்பதாகவே இக்கட்டுரை கருதுகிறது.
இந்தோ பசிபிக் மூலோபாயத்தை பொறுத்தவரை தமிழ் மக்கள் கேந்திர முக்கியத்துவம் மிக்க ஒரு புவியியல் அமைவிடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். இதனால் தமிழ் வாக்குகள் கேந்திர முக்கியத்துவம் மிக்கவை. அதனால் தான் கடந்த 2015ல் ஆட்சி மாற்றத்திற்கு தமிழ் மக்கள் தேவைப்பட்டார்கள். அதன்பின் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு ஒவ்வொரு பட்ஜெட் வாக்கெடுப்பின் போதும் தமிழ் மக்கள் தேவைப்பட்டார்கள். ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் ஒவ்வொன்றின் போதும் தமிழ் மக்களே அவரை பாதுகாத்தார்கள். கடந்த ஒக்டோபர் மாதம் மைத்திரிபால சிறிசேன ஆட்சியை குழப்பிய பொழுது தமிழ் மக்களே பெருமளவுக்கு ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாத்தார்கள். ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாப்பது என்பது அதன் அனைத்துலகப் பரிமாணத்தைப் பொறுத்தவரை மேற்கு நாடுகளின் நலன்களையும் இந்தியாவின் நலன்களையும் பாதுகாப்பதுதான். இப்படிப் பார்த்தால் கடந்த ஐந்து ஆண்டுகளாக மேற்கு நாடுகள் மற்றும் இந்தியாவின் பிராந்திய பூகோள நலன்களைப் பெருமளவுக்குப் பாதுகாக்கும் மக்களாக தமிழ் மக்களே காணப்படுகிறார்கள்.
ஆயின் தமிழ் மக்கள் கேந்திர முக்கியத்துவம் மிக்க வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள் என்று பொருள். அந்த அளவுக்கு பேர வாய்ப்புக்களைக் கொண்டிருக்கும் ஒரு மக்கள் கூட்டம் தனது பேரத்தை அதிகம் பிரயோகிக்க வேண்டிய ஒரு தேர்தல் களத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதனை நேற்று வரையிலும் முடிவெடுக்கவில்லை என்பது எதைக் காட்டுகிறது? அல்லது முடிவெடுக்கப் பிந்துவது எதை காட்டுகிறது? கட்சிகளும் சிவில் அமைப்புகளும் சில கருத்துருவாக்கிகளும் மக்களை அவர்களின் விருப்பப்படி வாக்களிக்க விடுங்கள் என்று கூறுவது எதைக் காட்டுகிறது? மக்கள் தங்கள் விருப்பப்படியே முடிவெடுப்பார்கள் என்றால் பிறகெதற்கு கட்சிகள்? பிறகெதற்கு பிரதிநிதித்துவ ஜனநாயகம்? பேசாமல் நேரடி ஜனநாயகத்துக்கு போய் விடலாமே?
ஒரு சமூகத்தின் பொதுப்புத்தியை நீண்டகால நோக்கில் திட்டமிட்டு நெறிப்படுத்தி திசைப்படுத்தும் தீர்க்கதரிசனம் மிக்க முடிவுகளை எடுப்பதற்கே கட்சிகள் தேவை. தலைவர்கள் தேவை. செயற்பாட்டாளர்கள் தேவை. கருத்துருவாக்கிகள் தேவை. ஆனால் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் கருத்துருவாக்கிகளும் முடிவெடுக்க முடியாத அல்லது முடிவெடுக்க தயங்குகின்ற அல்லது முடிவை வெளிப்படையாகப் பேசத் தயங்குகின்ற ஒரு நிலை எனப்படுவது எதைக் காட்டுகிறது? தமிழ் மக்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளாக இருக்கிறார்கள் என்பதையா?
கூட்டமைப்பு அதன் முடிவை இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் அறிவிக்கவில்லை. அவர்கள் பம்மிக் கொண்டு திரிகிறார்கள். ஒருபுறம் 13 அம்சங்கள் அடங்கிய பொது ஆவணம் இன்னொருபுறம் சஜித் தோற்று விடக்கூடாது என்ற கவனம். இரண்டுக்குமிடையே முடிவெடுக்காமல் அல்லது எடுத்த முடிவை அறிவிக்காமல் அக் கட்சியானது பம்மிக் கொண்டு திரிகிறது. அக்கட்சியின் ஆதரவாளர்கள் கடைசிக் கட்டப் போரில் கருணாநிதி எழுதியது போல பூடகமாக அரூபமாக சஜித்துக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
விக்னேஸ்வரன் தனது முடிவை கடந்த செவ்வாய்க்கிழமை ஓரளவிற்குக் கோடி காட்டிவிட்டார். ஆனால் அந்த முடிவு தமிழ் மக்களுக்கு துலக்கமான வழிகாட்டலை செய்யவில்லை. எந்த ஒரு பிரதான வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு தமது விரலை சுட்டிக் காட்டுவதற்குத் தமக்கு தார்மீக உரிமை இல்லை என்று விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார் அப்படி என்றால் 13 அம்சக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட சிவாஜிலிங்கத்தை ஒரு பொது வேட்பாளராக ஏற்றுக் கொள்ளலாமா? அல்லது சிறீதுங்க ஜெயசூரியவை ஏற்றுக் கொள்ளலாமா?
ஆனால் விக்னேஸ்வரன் பகிஸ்கரிப்பை ஆதரிக்கவில்லை என்று தெரிகிறது. பல்கலைக்கழக மாணவர்களும் ஆதரிக்கவில்லை.
விக்னேஸ்வரனுக்கு முன்னரே கஜேந்திரகுமார் தனது முடிவை வெளிப்படுத்தி விட்டார். எனினும் அவர் தனது முடிவாகிய பகிஷ்கரிப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கான பிரயத்தனங்கள் எதையும் இதுவரையிலும் மேற்கொண்டிருக்கவில்லை.
இப்படிப்பட்டதொரு வெற்றிடத்தில்தான் சில சிவில் அமைப்புக்களும் சில கருத்துருவாக்கிகளும் மக்களை அவர்கள் விரும்பிய முடிவை எடுக்க விடுங்கள் என்று கூறுகிறார்கள். வேறு சிலர் இப்பொழுது காலம் பிந்தி விட்டது எனவே இத்தேர்தலை குறித்து இனி எதுவும் சொல்வதற்கில்லை செய்வதற்கும் இல்லை இதை அப்படியே விட்டு விட வேண்டும் அடுத்த தேர்தலை பற்றி யோசிக்கலாம் அதாவது ஜனாதிபதி தேர்தலை பற்றி இனி சிந்தித்துப் பயன் இல்லை என்று கூற வருகிறார்கள்.
எவ்வளவு பயங்கரம்? எவ்வளவு பெரிய இயலாமை?
இந்தப் பிராந்தியத்திலேயே கேந்திர முக்கியத்துவம் மிக்க வாக்குகளைப் பெற்றுள்ள காரணத்தால் பேர வாய்ப்புகளை அதிகளவு கொண்டுள்ள ஒரு மக்கள் கூட்டத்துக்கு தபால் மூல வாக்கெடுப்பு வரையிலும் தெளிவாகவும் தீர்க்கதரிசனமாகவும் வழிகாட்ட ஒருவருமில்லையா?
பேர வாய்புக்களை அதிகளவு கொண்ட ஒரு மக்கள் கூட்டம் அதன் பேரத்தைப் பிரயோகிக்க முடியாதிருப்பதற்கு யார் பொறுப்பு?
மக்கள் தமது வாக்குரிமையை கட்டாயம் பிரயோகிக்க வேண்டும் என்று வகுப்பெடுக்கும் பலருக்கும் மக்கள் யாருக்கு? ஏன்? வாக்களிக்க வேண்டும் என்று கூறத் தெரியவில்லை. அவ்வாறு துலக்கமாகக் கூறமுடியாதபடி தெரிவுகள் இறுகிப் போனதுக்கு யார் பொறுப்பு? பேர வாய்ப்புக்கள் அதிகமுடைய ஒரு மக்கள் கூட்டத்தின் தலைவர்கள் இப்படி தெரிவுகளற்ற முடிவுகளற்ற ஓர் அரசியல் சந்தியில் வந்து நிற்கக் காரணம் என்ன? மக்களே முடிவெடுக்கட்டும் என்றால் கட்சிகள் எதற்கு? தலைவர்கள் எதற்கு ? சிவில் அமைப்புகள் எதற்கு?
ஒரு காலம் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த ஒரு மக்கள் கூட்டம் இப்பொழுது முடிவெடுக்க முடியாத அல்லது பேரத்தைக் கட்டியெழுப்பும் விதத்தில் திட்டமிட்டு முன்கூட்டியே தீர்க்கதரிசனமான முடிவுகளை எடுக்கத் தெரியாத அல்லது எடுத்த முடிவை வெளிப்படையாக மக்களுக்குக் கூறத்தயங்கும் நோஞ்சான் தலைவர்களைக் கொண்ட ஒரு மக்கள் கூட்டமாக மாறிவிட்டதா?
0 comments:
Post a Comment