வரிஅறவீட்டுக்காகப் பின்பற்றப்படும் முறைமையை
வினைத்திறனாகவும் முறையாகவும் மேற்கொண்டு நாட்டின் தேசிய பொருளாதாரத்தைப்
பலப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
இன்று (06) முற்பகல் கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற
தேசிய வருமானவரி ஆணையாளர்கள் சங்கத்தின் 16ஆவது வருடாந்த
மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அரச நிறுவனங்கள், சில தனியார்துறை
வியாபார நிறுவனங்கள் மற்றும் முதலீட்டுத் திட்டங்களின்மூலம் அரசாங்கத்திற்குக்
கிடைக்க வேண்டிய பெரும்பாலான வரிகளுக்கு நடைமுறையிலுள்ள முறைகளில் காணப்படும்
குறைபாடுகளின் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட
ஜனாதிபதி, நாட்டின் தேசிய
பொருளாதாரத்தைப் பலப்படுத்தி மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத்தரத்தை ஏற்படுத்திக்
கொடுப்பதற்கும் சுபீட்சமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் அனைவரும் தமது
கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.
நாட்டின் தேசிய வருமான வரிச்சேவையின் தரத்தை
மேம்படுத்துவதற்கு அச்சேவையிலுள்ள ஊழியர்களுக்குத் தேவையான வெளிநாட்டுப் பயிற்சி
சந்தர்ப்பங்களை எதிர்காலத்தில் அதிகமாகப்
பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தேசிய பொருளாதாரத்தின் இதயத்திற்கு இரத்தம் பாய்ச்சும் தேசிய
வருமான வரித்துறை நாட்டின் தேசிய வருமானத்தைப் பலப்படுத்துவதற்கு மேற்கொண்டுவரும்
பணிகளை ஜனாதிபதி பாராட்டினார்.
2007 ஆம் ஆண்டு முதல்
தேசிய வருமானவரித் திணைக்களத்திற்கு உதவி ஆணையாளர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்படாத
பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதுடன்
திணைக்களத்தைப் பலப்படுத்தி அரசாங்கம் எதிர்பார்க்கும் தரமான சேவையைப்
பெற்றுக்கொள்வதற்கு அந்த ஆட்சேர்ப்புகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் புதிய
வரிச்சட்டம் மற்றும் திணைக்களத்தின் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக கண்டறிவதற்காக
சிங்கள புத்தாண்டு விடுமுறையின் பின்னர் குறித்த அனைத்து தரப்பினரதும்
பங்குபற்றுகையுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஓய்வுபெற்ற சிரேஷ்ட ஆணையாளர் பி.ஜீ.கே.சமரதுங்கவுக்கு
ஜனாதிபதியினால் நினைவுச் சின்னமொன்று வழங்கிவைக்கப்பட்டது.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, தேசிய வருமானவரி ஆணையாளர் நாயகம் கல்யாணி தஹநாயக்க, தேசிய வருமான
வரிச்சங்கத்தின் தலைவர் மஹிந்த குணவீர உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில்
கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment