குலைந்து போகும் குருந்தனூர்மலை யானை அடக்கிய மாதரசி அரியாத்தை வாழ்ந்த மண்ணென்ற சிறப்புக்குரிய முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனைக் கிராமம் பல்வேறு வரலாறுகள்
, பாரம்பரியங்கள் , மரபுகள் , தொல்லியல் எச்சங்களையும் கொண்டமைந்தது.
ஆனால் இன்றைய நடைமுறைச் சூழலில் இவற்றுக்கான இடம் குறைந்து காணப்படுகின்றது. பாரம்பரிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு இடங்கள் இன்று அழிவடைந்து போகின்றன. இன்னும் ஒரு சில வருடங்களில் அவற்றின் அழிவு முழுமை பெற்றுவிடும். இவற்றுக்குக் காரணம் நாங்கள் ஒவ்வொருவரும். நவீன காலம் என்று சொல்லிக்கொண்டு நுகர்வுக் கலாசாரத்தினைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றோம்.
உண்டு , உடுத்து , உறங்கிவிட்டால் சரி இதுதான் எங்கள் வாழ்வு என்று வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இன் நிலை தொடர்கின்ற போது ஒருபக்கம் எங்களுடைய அடையாளங்கள் , தொன்மங்கள் அழிக்கப்படுகின்றன. இவற்றை நாம் வட கிழக்கு மாகாணங்களில் அதிகம் காணமுடியும். முல்லைத்தீவு மாவட்டத்தின் இயற்கையெழில் கொஞ்சும் ஐவகை நிலங்களால் சூழப்பட்ட குமுழமுனைக்கிராமம் தண்ணிமுறிப்புக்குளம் , குருந்தனூர்க்குளம் , ஆறுமுத்தான்குளம் , மறிச்சுக்கட்டிக்குளம் , நித்தகைக்குளம் , ஆலடிக்குளம் என இயற்கையின் அங்கங்களைத் தனது எல்லைப்பரப்பாகக் கொண்டு காணப்படுகின்றது.
குமுழமுனையில் இருந்து மூன்றரை கிலோ மீற்றர் தொலைவில் தண்ணிமுறிப்புக் குளத்திற்கு இடப்பக்கமாகவும் புதுக்கண்டம் வயல்வெளியின் முடிவாகவும் குமுழமுனைக்கிராமத்தின் எல்லையாகவும் கொண்டமைந்த இடம்தாம் “ குருந்தனூர்மலை “ இதன் பெயர் இன்று மருவி குருந்தூர்மலை என அழைக்கப்படுகின்றது. குருந்தனூர்மலை என அழைக்கப்படக் காரணம் “ குருந்தமரம் “ எனப்படும் ஒரு வகை மரம் அப் பகுதியெங்கும் காணப்பட்டமையாகும.; இங்குதான் பழமைவாய்ந்த சிவன் ஆலயம் ஒன்று அமையப்பெற்றிருந்தது.
வரலாறு
இலங்கையின் ஆதிக்குடிகளான இயக்கர் , நாகர் காலத்தில் நாககுல மன்னர்களின் செல்வாக்கும் பரம்பலும் களனி மற்றும் யாழ்ப்பாணத்தின் நாகதீபம் போன்ற பகுதிகளில் காணப்பட்டுள்ளது என வரலாற்று நூல்கள் ஆய்வுகள் குறிப்பிடுகின்ற போதும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் அவர்களின் செல்வாக்கு காணப்பட்டதை குருந்தனூர் சிவாலயத்தினூடாக காண முடியும். நாகர் குல மன்னன் நாகராஜன் குருந்தனூர்மலை உச்சியில் சிவாலயம் ஒன்று அமைத்து வழிபட்டதாகவும் இக் கோவிலில் இருந்து ஏழு வீதிகளால் தேர் ஓடப்பட்டிருப்பதாகவும் இன்றும் தண்ணிமுறிப்பு வீதியொன்றிற்கு தேரோடும் வீதி என்ற பெயர் அங்கு புழக்கத்தில் காணப்படுகின்றமை இதற்குச் சான்றாகும்.
1982 ஆம் ஆண்டு பேராசிரியர் பத்மநாதன் குருந்தனூர் மலைக்குச் சென்று ஆலயத்தின் சிதைவுகளைப் பார்வையிடுகின்ற போது அங்கு ஓர் கற்தூணில் காணப்பட்ட பிராமி எழுத்தினை மொழியாக்கம் செய்தார.; அதில் “ வேள் நாகன் மகன் வேள் கண்ணன் ’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக பதிவு செய்துள்ளார். 1783 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் வன்னியில் அதிகளவான சைவக் கோவில்கள் அழிக்கப்பட்டன. ஒல்லாந்த ஆட்சியாளரில் ஒருவரான கப்டன் நாகெல்லு வன்னி நிர்வாகத்தினை நேரடியாக நடாத்தினான்.
இவனது காலத்தில் வன்னிப் பிரதேசத்தில் இருந்த அனைத்துச் சைவக் கோவில்களும் இடிக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் குருந்தனூர் சிவாலயமுமாகும். இதன் பின்னர் ஆலயத்தினுடைய எச்சங்கள் மலையின் பல பாகங்களிலும் காணப்பட்டன. குருந்தனூர் மலை தொடர்பாக ஆய்வாளரும் எழுத்தாளருமான கலாமணி சி. தெய்வேந்திரம்பிள்ளை குறிப்பிடுகையில்..
கலாமணி சி.தெய்வேந்திரம்பிள்ளை
1982 ஆம் ஆண்டு வரலாற்றுத்துறைப் பேராசிரியர்களான இந்திரபாலா , சிற்றம்பலம் , ரகுபதி ஆகியோருடன் குருந்தனூர்மலைக்குச் சென்றேன். அந்த மலையின் செழிப்பு வர்ணிக்க முடியாத அளவிற்கு காணப்பட்டது. மலையின் மேலுள்ள உச்சியின் அடிவாரத்தில் இருந்து உச்சிவரை கருங்கற்களாலான படிகள் காணப்பட்டன. குருந்தனூர் மலையின் இரு உச்சிகளில் ஒன்றில் சிவாலயம் இருந்ததற்கான அடையாளம் காணப்பட்டது.
அங்கு தீர்த்தம் வடிகின்ற கோமுகைக் கல் உடைந்த நிலையிலும் மற்றும் கற்தூண் , கருங்கற் பொழிகையிலான பீடங்களும் காணப்பட்டன. அந்த உயரமான மலை உச்சியில் தீர்த்தக் கேணி ஒன்றும் உள்ளது. இவ் உச்சியில் “ காட்டாமணக்கு “ எனப்படும் நீண்ட பெருத்த நெடிய மரம் ஒன்று அதன் உச்சியில் ஏறிப் பார்க்கின்ற போது “பச்சை வயல்ப் படுக்கையும் தென்னை மரங்களின் தென்றலின் சுழிப்பையும் தாண்டி இந்து சமுத்திரம் இதமாகக் காட்சியளிக்கும்.” இதன் அழகை எம் முன்னோர்களும் கண்டு ரசித்தனர். இங்கு வந்த வரலாற்றுத்துறைப் பேராசிரியர்கள் இங்கு சிவனாலயம் இருந்தமைக்கான அடையாளங்கங் காணப்படுவதாக குறிப்பிட்டனர். 1982 ஆம் ஆண்டு இலங்கை இந்து கலாசார திணைக்களத்தில் குருந்தனூர் சிவாலயம் எனப் பதிவு செய்துள்ளேன். “ ஈழத்து சிவாலயங்கள் ’’ என்;ற நூலினை பேராசிரியர்.பத்மநாதன் வெளியிட்டுள்ளார்.அதில் குருந்தனூர் சிவாலயம் பற்றியும் குறிப்பிடப்பட்பட்டுள்ளது.
ஐயனார் ஆலயம்
1982 ஆம் ஆண்டு குமுழமுனையைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை என்பவரால் குருந்தனூர் மலையின் சிறிய உச்சியில் ஐயனார் ஆலயம் ஒன்று உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அங்கு சென்று ஐயனுக்கு மடை பரவி பொங்கல் படைத்து வருவதுண்டு. இவற்றைத் தரிசிக்க தண்ணிமுறிப்பு,ஆறுமுத்தான் குளம் , குமுழமுனை , அளம்பில் , செம்மலை , தண்ணீறூற்று போன்ற பகுதிகளைச் சேர்ந்த அடியவர்கள் அங்கு சென்று வருவதுண்டு. இதன் தொடர்ச்சி 2008 ஆம் ஆண்டு வரை காணப்பட்டது. சிதம்பரப்பிள்ளை இறந்து போன பின்னர் ஒவ்வொருவரும் தங்கள் நேர்த்திகளைத் தாங்களே சென்று நிறைவேற்றும் பழக்கம் காணப்பட்டது. வயல் செய்வோர் , மாடு வளர்ப்போர் , ஆற்றங்கரையில் தோட்டம் செய்வோர் ஐயனாரின் அருள் தங்களுக்கு கிடைப்பதாகவும் இதனால் உயர்ந்த விளைச்சலையும் நிறைவான பால் உற்பத்தினையும் தருகின்ற காவல்த்தெய்வமாக வழிபட்டு வந்தனர்.
தண்ணிமுறிப்புக் குடியிருப்பு
1970 தொடக்கம் 1983 ஆம் ஆண்டு வரை குருந்தனூர் மலையின் அடிவாரத்தில் ஒரு சிறிய கிராமம் காணப்பட்டது. அதுவே தண்ணிமுறிப்புக் குடியிருப்பாகும். இக் குடியிருப்புப்பற்றி தண்ணிமுறிப்பு
கிராம சேவகர் க.ஜெகதீஸ்வரன் தெரிவிக்கையில்…….
க.ஜெகதீஸ்வரன் ( புளு )
கரைத்துறைப்பற்று பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்புக் குடியிருப்பானது 35 குடும்பங்களைக் கொண்டு காணப்படுவதுடன் வாக்காளர் இடாப்பிலும் இடம்பெற்றுள்ளனர்.
தண்ணிமுறிப்புக் கிராம அலுவலகர் பிரிவில் ஆறுமுத்தான்குளம் , தண்ணிமுறிப்பு என இரண்டு குடியிருப்புப் பகுதிகள் காணப்படுகின்றன. இன்று ஆறுமுத்தான்குளம் மட்டும் இயங்கு நிலையில் உள்ளது. இவற்றைவிட தண்ணிமுறிப்புக் கிராமத்தினை அண்டிய குருந்தனூர்மலை , குருந்தனூர்க்குளம் , வீரம்பிலவு போன்ற இடங்களும் இவற்றின் பிரிவுக்குட்பட்டவையேயாகும். 1970 , 1980களில் தண்ணிமுறிப்புக் கிராமத்தில் பாடசாலை, நெற்களஞ்சியம், தபால் அலுவலகம் போன்றன காணப்பட்டது. இன்று அனைத்தும் இடியுண்டு, காடு சூழ்ந்து காணப்படுகின்றது.
இங்கு வாழ்ந்த மக்கள் நாட்டில் ஏற்ப்பட்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக பூதன்வயல், தண்ணீறூற்று, முள்ளிக்குளம் போன்ற பகுதிகளுக்குச் சென்று வசித்து வருகின்றனர். இம் மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் குருந்கனூர்த் தலமே காணப்பட்டது. சுற்றுலாத்தலம். ஈழவிடுதலைப் போராட்ட காலத்தில் வன்னியில் வாழ்ந்த அதிகமான மக்கள் குருந்தனூர்மலைக்கு செல்லாதிருந்திருக்க வாய்ப்பில்லை. 2008 ஆம் ஆண்டு காலப்பகுதிவரை வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களினதும் அனைத்துப் பாடசாலை மாணவர்களினதும் சுற்றுலாத்தலமாக குருந்தனூர்மலை விளங்கியது.
இம்மலைக்கு வருகின்றவர்கள் அதிகமாக மன்னார், வவுனியா, முல்லைத்தீவுப் பகுதிகளைச் சேர்ந்தவர்களே. இங்கு வருகின்ற போது பொங்கல் செய்து மலையின் உச்சியில் இருக்கின்ற தீர்த்தக் கேணியில் சுற்றியிருந்து பிரசாதம் உண்டு மகிழ்வதுடன் ஆடல், பாடல் போன்றவற்றை நிகழ்த்தி இந்து சமுத்திரத்தின் அழகினையும் கண்டு மகிழ்ந்த வரலாறும் காட்சிகளும் கண்முன் விரிந்து கிடக்கின்றன.
இன்றைய நிலை.
உள்நாட்டுப் போர் நடை பெற்ற காலங்களில் ஆலயத்தின் சிதைவுகள் மலையின் பகுதியெங்கும் பரவலாகக் காணப்பட்டது. இயற்கையின் எழிலில் அமைந்த குருந்தனூர்ச் சிவன், மற்றும் ஐயனார் ஆலயத்தின் தொன்மங்கள் இன்று திருடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
குருந்தனூர் மலையில் உள்ள பீடம் மற்றும் கற்தூண் சிதைவுகள்
குருந்தனூர் மலை தண்ணிமுறிப்புக் குளம்
குருந்தனூர் மலையின் இரு உச்சிகளிலும் சதுர வடிவில் பாரிய குழிகள் தோண்டப்பட்டுள்ளது. இவற்றைத் தோண்டியவர்கள் யார்? தோண்டப்பட்டதன் காரணம் என்ன? இதிலிருந்து பெற்றது என்ன? என்பவை உரிய அதிகாரிகளால் கண்டறியப்பட வேண்டும். அங்கிருந்த கருங்கற் பொழிகையிலான பீடங்கள் ஒரு சிலவற்றை மட்டும்தான் இன்று காணமுடிகின்றது.
மிகுதி அனைத்தும் திருடப்பட்டுவிட்டது. 29.08.2015 அன்று வடமாகாணசபை உறுப்பினர்களான விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், உறுப்பினர் க.சிவநேசன் போன்றோர் இடம்பெயர்ந்த மக்களுடன் குருந்தனூர் ஆலயத்திற்குச் சென்றனர்.
அங்கு பொங்கல் செய்து, மடை பரவி மலையின் உச்சியில் இருந்து ஊடகங்களிற்கு முழங்கிய முழக்கம்தான் இன்றுவரை அதன் செயற்பாடுகள் கோடைகாலமாகத்தான் இருக்கின்றது. குருந்தனூர் மலையின் எதிர்காலம் குருந்தனூர் மலையின் அடிவாரத்தில் அமையப்பெற்ற தண்ணிமுறிப்புக் கிராம மக்கள் இன்னும் மீள்குடியமரவில்லை. அவர்களுக்கான மீள்குடியேற்றம் தொடர்பான உரிய திட்டங்கள்; அமுலாக்கம் செய்யப்படவில்லை.
சொந்த இடத்தில் வாழ்கின்ற சந்தோசம் வேறு எங்கும் கிடையாது என கிராமவாசி க.வல்லிபுரம் தனது மன ஆதங்கத்தினை வெளிப்படுத்தினார். முதலில் மக்களின் மீள்குடியேற்றம் விரைந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும.; இவற்றை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வது தமிழ்த் தலைமைகளின் கடமையாகும்.
இதன் பின்பு இக்கிராம மக்களால் குருந்தனூர் ஆலயத்தின் வழிபாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதுடன் வன்னியில் மிகப் பெரும் சுற்றுலா மையமாகவும் இது விளங்கும் என்பதை இன்றுவரை யாரும் கருத்திலெடுக்கவில்லை.
இன்னிலை தொடர்ந்தால் குருந்தனூர் ஆலயத்தின் அடையாளங்கள், சின்னங்கள் போன்றன இன்னும் ஒரு சில வருடங்களில் முற்றுமுழுதாக காணாமல் போகச் செய்யப்பட்டு புதிய வரலாற்றினை நிறுவ பலர் கங்கணம் கட்டிவரும் நிலை கண்டிப்பாக உருவாகும்.
இதன் பின் அரசியல்த் தலைமைகள் ஓடி வந்து ஒட்டுமொத்த மக்களின் கண்களைக் கட்டிவிட்டு தாங்கள் இவற்றை மீட்கப் போரடுவதாக திட்டமிட்ட நாடகத்தினை ஆடுவார்கள். இல்லாத ஒன்றை உருவாக்க முற்படும் அரசியல் வாதிகள் இருக்கின்றவற்றைப் பேணிப் பாதுகாக்க முயலாமை கவலை தருகின்ற விடயமே!
மாறிவரும் உலகில் மாற்றங்கள் தேவை என்பதற்காக தொன்மைகளை மாற்ற முடியாது. அவை என்றும் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டியவை. இதன்படி குருந்தனூர் மலையின் தொன்மத்தினைப் பாதுகாக்கவும் உரிய ஆய்வுகளினை மேற்கொண்டு அதன் முடிவுகளை நிறுவுவது தொல்லியத் திணைக்களத்தின் கடமையாகும்.
குருந்தனூர் மலையடிவாரத்தில் தொல்லியல் திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என பதாகையொன்று தொங்கவிடப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை எந்தச் செயற்பாடுகளும் நடைபெறவில்லை. இது தொடர்கின்ற போது மலையின் தொன்மம் அனைத்தும் காணாமல் போன பின்பு அந்தப் பதாகை மட்டும் எஞ்சியிருக்கும் என்பது நிதர்சனம்.
முல்லைத்திவாகர். ( 20.09.2016 )
0 comments:
Post a Comment