கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் கோல்டன் பூங்கா ஆகியன பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு பார்வையிடும் வாய்ப்பு இன்றிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனைக்கு அமைய இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் இன்று முதல் 14ஆம் திகதி வரை பாடசாலை மாணவார்களுக்கும் பொதுமக்களுக்கும் இம்மாளிகையினை பார்வையிட வாய்ப்பு கிடைக்கின்றது.
29 ஆளுநர்கள் மற்றும் 6 ஜனாதிபதிகள் தமது உத்தியோகபூர்வ பணிகளுக்காகவும் வாசஸ்தலமாகவும் உபயோகப்படுத்திக் கொண்ட உத்தியோகபூர்வ இல்லமாகிய கோட்டை ஜனாதிபதி மாளிகை பொதுமக்களின் பார்வைக்காக வரலாற்றில் முதற் தடவையாக திறந்து வைக்கப்படுகின்றது.
புதிய அரசியல் சம்பிரதாயத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில் இதுவரை பொதுமக்கள் உட்செல்ல முடியாதவாறு மூடி வைக்கப்பட்டிருந்த அரச மாளிகையின் கதவுகளை பொதுமக்களுக்காக திறந்துவிட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன் ஆரம்ப விழாவில் நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டதுடன் அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்த ஜனாதிபதி அவர்கள் எதிர்காலத்தில் கண்டி மற்றும் நுவரெலியாவில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளையும் பார்வையிடும் வாய்ப்பினை பாடசாலை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெற்றுத் தருவதாகக் கூறினார்.
தமது வதிவிடமாக ஜனாதிபதி மாளிகையினை ஏன் தெரிவு செய்யவில்லை என மாணவன் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள்இ சாதாரண பொதுமக்களை பிரிந்து சொகுசு மாளிகையில் வாழந்துகொண்டு மக்களுக்கு உரிமையான சேவையினை செய்ய இயலாதெனக் கூறினார்.
வரலாற்று ரீதியிலான முக்கியத்துவம் மிகுந்த கோட்டை ஜனாதிபதி மாளிகை இந்நாட்டு மக்களின் சொத்து எனவும் ஆகையால் அதனை பார்வையிடும் வாய்ப்பினை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டுமென தீர்மானித்ததாகவும் ஜனாதிபதி அவர்கள் கூறினார்.
இன்று முதல் 14ஆம் திகதி வரை பிற்பகல் 2.00 முதல் 7.00 மணி வரை ஜனாதிபதி மாளிகையை பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன்இ 077- 3086366 தொலைபேசி மூலம் ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் விமர்சன சத்துரங்க அவர்களுடன் தொடர்பு கொள்வதன் மூலமும் 0714 -241802 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலமும் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்
0 comments:
Post a Comment