சிறந்த இடதுசாரிப் போராளியை சமூகம் இழந்துவிட்டது - டக்ளஸ் தேவானந்தா

தமிழ் மக்களின் மாற்று அரசியல் குரலை ஆணித்தரமாகப் பதிவு செய்வதில்  தனது பங்களிப்பை மறுக்க முடியாதபடி பதித்த எழுத்தாளராக வாழ்ந்து வந்த சிறந்த சமூக அக்கறையாளரான சிவா சுப்ரமணியம் அவர்கள் இறந்த செய்தி கேட்டு மிகுந்த கவலையடைந்தேன்.


இடது சாரிக் கொள்கைகளில் தீவிர பற்றுக் கொண்டிருந்ததோடு, சமூகம் மீதான தனது பார்வையையும், விமர்சனத்தையும் துணிச்சலோடு எழுதிய அவரின் எழுத்துக்கள், எமக்கு பக்கபலமாகவும், வழிகாட்டியாகவும் எங்களோடு பயணித்திருக்கின்றது.
அவரின் எழுத்துக்கள், ஆய்வுக் கட்டுரையாகவும், இலக்கியங்களாகவும், கவிதைகளாகவும், பத்தி எழுத்துக்களாகவும், சிறு கதைகளாகவும் எமது மக்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றது.


அவரோடு, நெருக்கமாகப் பழகிய நாட்களில் ஆக்கபூர்வமாகவும், ஆழமாகவும் அவர் முன்வைக்கும் அரசியல் விமர்சனங்கள் அர்த்தம் நிறைந்தவையாக இருந்திருக்கின்றன. அவருக்கு உடம்பு சரியில்லாத போதும், அவரை கோண்டாவிலுள்ள அவரது வீட்டிலும் வைத்தியசாலையிலும் சந்தித்திருக்கின்றேன்.


தனது உடல் ஒத்துழைக்காத நிலையிலும், எழுதுவதற்கு அவர் எடுத்துக் கொண்ட கடினமான முயற்சிகளைக் கண்டு வியந்திருக்கின்றேன்.


எழுத்துத்துறை மீதும், பத்திரிகைத் துறைமீதும் தோழர் சிவா சுப்ரமணியம் அவர்கள் கொண்டிருந்த விருப்பத்தையும், ஆர்வத்தையும் காணும்போது புதிய உற்சாகமொன்று எமக்குள்ளே தொற்றிக் கொள்ளும்.


தமிழைப் போலவே, சிங்கள மொழியிலும், ஆங்கில மொழியிலும் தோழர் சிவா சுப்ரமணியம் அவர்கள் சிறந்த புலமை உள்ளவராக இருந்தார்.


இறுதி மூச்சுவரை தான் சுமந்து நின்ற அரசியல் கொள்கைகளுக்கமைவான தனது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக அவர் ஏந்தியிருந்த எழுதுகோளை சரியாகவே பிரயோகித்திருக்கின்றார்.


அவரின் இழப்பு ஈடு செய்யமுடியாதது. அவரின் இழப்பின் துயரில் துவண்டிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் துயரங்களில் நானும் பங்கெடுத்துக் கொள்கின்றேன்.
About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com