வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி மட்டுமன்றி இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்குமே அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றுகின்றோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருப்பதை யதார்த்தமான கருத்தாகவே கருதுகின்றேன்.
புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது அதாவது அரசுடன் இணக்க அரசியல் நடத்துவது யுத்தத்தால் அழிந்த எமது தாயக வாழ்விடத்தை அபிவிருத்தியால் மீளக் கட்டி எழுப்பவதற்கும், அரசியல் தீர்வுக்காகவுமே என்று நான் முன்னர் கூறியதையும், அதற்காக இரவு பகலாக அர்த்தபூர்வமாக உழைத்தபோதும், அதை தமிழர் தேசியத்திற்கும், உரிமைப் போராட்டத்திற்கும் எதிரானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறினார்கள்.
ஆனால் மத்திய அரசுகளுடன் அரசியல் ரீதியாக பலமாக இருந்து கொண்டு, இணக்கமாக செயற்படுவதன் மூலமாகவே நாம் எமது இலக்குகளை அடைந்து கொள்ளமுடியும் என்று தொடர்ந்தும் கூறிவந்திருக்கின்றேன்.
இன்று திரு. சுமந்திரன் கூறுவதைக் கூட்டமைப்பினர் 2004 ஆம் ஆண்டு 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும்போதும், 2010 ஆம் ஆண்டு 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும்போதும், செய்திருந்தால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அழிவுகளைத் தடுத்திருக்கலாம், அபிவிருத்தியை உச்சபட்சமாக முன்னெடுத்திருக்கலாம், அரசியல் தீர்வையும்கூட பெற்றுக் கொண்டிருக்கலாம்.
இவையெல்லாவற்றையும் விடவும், நடைமுறை யதார்த்தத்தை உள்வாங்கி தமிழர் அரசியல் முன்னெடுக்கப்பட்டிருக்கக்கூடிய சூழலில் தமிழ் அரசியல் கட்சிகள் ஏட்டிக்குப் போட்டியாக இருந்திருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது.
எல்லோரும் முரண்பாடுகளுக்குள்ளும் உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு ஓரணியாக செயற்பட்டிருப்பதோடு, எமது ஒற்றுமையை தென்னிலங்கைக்கும், சர்வதேசச் சமூகத்திற்கும் பலமாக வெளிப்படுத்தியிருக்க முடியும்.
நாம் பிரிந்து நின்று ஒருவர் குறித்து ஒருவர் முரண்பட்டுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
நாம் பிரிந்து நின்று ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டிருந்தால் அது நம்மை பிரித்தாலும் அவசியமுள்ள சக்திகளுக்கு வசதியாகப் போய்விடும்.
நான் இணக்க அரசியல் செய்யும்போது துரோகி என்பதும், அதையே கூட்டமைப்பு செய்தால் அதை சாணக்கியம் என்று கூறுவதும் அர்த்தமற்றதாகும்.
தென்னிலங்கை அரசுகளைப் பொறுத்தவரை அவர்கள் தமிழ் மக்களுக்கான வேலைத்திட்டத்தை முதன்மைப்படுத்திச் செயற்படுவதில்லை.
தமிழர் பக்கத்திலிருந்து நாமே எமது மக்களின் அரசியல் கோரிக்கைகளையும், தேவைகளையும் முன்னிலைப்படுத்திச் செயற்பட வேண்டும்.
தற்போது இணக்க அரசியல் வழிமுறையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்பற்றுவதை நான் விமர்சிக்கவில்லை.
ஆனால் அந்த இணக்க அரசியல் வழிமுறையை தமிழ் மக்களுக்குப் பயனளிப்பதாகப் பயன்படுத்தாமல், தமது பதவிகளுக்காகவும், தனி மனித பெருமிதங்களுக்காகவும் பயன்படுத்துவதையே விமர்சிக்கின்றேன்.
நான் இணக்க அரசியல் நடத்தியபோது எமக்குக் கிடைத்திருந்த அரசியல் அதிகாரத்திற்கு ஏற்பவும், எனது கடுமையான முயற்சிகளுக்கூடாகவும் அழிந்த எமது மக்களின் வாழ்விடத்தை அபிவிருத்தியால் மீளக்கட்டியெழுப்பியும்,
எமது இளைஞர் யுவதிகளுக்கு ஆயிரக்கணக்கில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்தும், அரசியல் தீர்வை வலிறுத்தும் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்கவும் பாடுபட்டிருக்கின்றறேன்.
அது உலகறிந்த விடயமாகும். ஆனாலும் நான் செய்து முடிக்கத் திட்டமிட்டிருந்த பணிகளில் அனேகமானவை நிறைவு பெற்றிருந்தாலும், அரசியல் தீர்வு உட்பட்ட இன்னும் பல திட்டங்கள் மேலும் செய்ய வேண்டியிருக்கின்றன என்பதையும் ஏற்றுக் கொள்கின்றேன்.
முகநூல் செய்தி
0 comments:
Post a Comment