யாழ்ப்பாணம் – கொழும்பு சொகுசு பஸ்ஸில் சட்டவிரோதமான முறையில்முதிரை மரக் குற்றிகள் கடத்தப்பட்ட சம்பவமொன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்தின் சிறாட்டிக்குளம் பகுதியில் வைத்து யாழ்ப்பாணம் – கொழும்பு சேவையில் ஈடுபடும் சொகுசு பஸ்ஸில் சட்டவிரோதமான முறையில் முதிரை மரக் குற்றிகள் கடத்தி வரப்பட்டது.
இதன் போது பொதுமகன் ஒருவரால் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் விசேட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த சொகுசு பஸ் மடக்கிப் பிடிக்கப்பட்டது.
நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறித்த பேரூந்தின் சாரதி கைதுசெய்யப்பட்டதுடன் வாகன உரிமையாளர் மற்றும் உதவியாளர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பியுள்ளனர்.
குறித்த பஸ் தற்போது மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரக் குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பயணிகள் பஸ்ஸின் உட்கட்டமைப்பானது பயணிகள் இருக்கைகள் அனைத்தும் அகற்றப்பட்டு மரக் குற்றிகள் கடத்தலுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பஸ்ஸில் இதற்கு முன்னரும் பல தடவைகள் சில உள்ளூர் பொலிசாரின் ஒத்துழைப்புடன் பல கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளது எனவும் அப்பகுதி மக்கள் இது தொடர்பில் பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டுள்ளனர் .அவரின் தலைமையில் கீழ் செயற்படும் விசேட குற்றத் தடுப்புப் பிரிவினரே மேற்படி பஸ்ஸினை மரக் குற்றிகளுடன் பிடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைக் காலமாக யாழ் – கொழும்பு சொகுசு பஸ்களில் கஞ்சா கடத்துவது உள்ளிட்ட பல்வேறு மனித குலத்துக்கு தீங்கு விளைவிக்கும் சட்டவிரோதமான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை சுட்டிக் காட்டத்தக்கது.
0 comments:
Post a Comment