தனது முன்னாள் காதலனைக் கடத்தி வந்து ஆடைகளை வலுக்கட்டாயமாக களைந்து நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கைப் பெண்ணொருவருக்கு எதிராக துபாயில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான செய்தியொன்று நேற்றைய கலீஜ்டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.
குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
துபாயில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவருக்கு சிறிது காலத்துக்கு முன்னர் சூடானிய ஆண் ஒருவருடன் தொடர்பொன்றை ஏற்படுத்திக் கொண்டிருந்துள்ளார்.
அதன் பின்னர் இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு விலகிய பின்னர் குறித்த பெண்ணுக்குத் தனது முன்னாள் காதலனிடம் தன்னுடைய நிர்வாணப் புகைப்படங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
அதனை மீளப்பெற்றுக் கொள்ள அவர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகிப் போன நிலையில், தனது முன்னாள் காதலனை கடத்திவந்து பலவந்தமாக குறித்த புகைப்படங்களை பறித்துக் கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார்.
அதன்பிரகாரம் சூடான் நாட்டைச் சேர்ந்த இன்னொரு இளைஞர் மற்றும் குறித்த பெண்ணின் கம்பனியில் தொழில்புரியும் இலங்கையர் ஒருவர் ஆகியோரின் உதவியுடன் அப்பெண் தனது முன்னாள் காதலரை கடத்தி வந்துள்ளார்.
அதன் பின் அவரது உடைகளை பலவந்தமாக களைந்து கட்டி வைத்து கடுமையாக தாக்கியது மட்டுமன்றி, நிர்வாணப்படுத்தி புகைப்படமும் எடுத்துள்ளார்.
தனது முன்னைய காதலன் கையில் இருந்த மொபைல் போனில் தனது புகைப்படங்களை தேடிக் கொள்ள முடியாமல் அதனை ஆத்திரத்துடன் மேசையில் அடித்து உடைத்துள்ளார்.
அதன் பின்னர் ஒருவாறு தப்பிச் சென்ற அப்பெண்ணின் முன்னைய காதலன் இது குறித்து துபாய் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். இச்சம்பவம் கடந்த வருடம் டிசம்பரில் நடைபெற்றுள்ளது.
அதன் பின்னர் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் இலங்கையைச் சேர்ந்த குறித்த பெண் தனது முன்னாள் காதலனை கடத்தி வந்து கடுமையாக தாக்கி, நிர்வாணப் புகைப்படம் எடுத்திருந்தமை நிரூபணமாகியுள்ளது. அதன் பேரில் இப்போது அவருக்கு எதிராக வழக்குப் பதியப்பட்டுள்ளது.
குறித்த இலங்கைப் பெண்ணுக்கு 30 வயது என்றும் அவரது முன்னைய காதலனான சூடான் நாட்டவர் 36 வயதுடையவர் என்றும் இது தொடர்பான செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment