இந்திய அரசாங்கத்தினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட ஐம்பதாயிரம் வீடமைப்பு திட்டத்தில் மலையக பெருந்தோட்ட மக்கள் வாழும் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கென 4000 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனாலும் கடந்தகால அரசியல் இழுபறி நிலை காரணமாக வட கிழக்கில் வீடமைப்பு திட்டம் செயற்படுத்தப்பட்ட நிலையிலும் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் நிர்மாணபணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.
100 நாள் வேலைத்திட்டதில் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக பழனிதிகாம்பரம் அவர்கள் பொறுப்பேற்றதன் பின் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த வீடமைப்பு திட்டத்தினை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி அதற்கான நடவடிக்கையினை எடுத்து வந்தார்.
இதன் பயனாக (01.04.2016) இத்திட்டத்தினை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் கருத்துரைக்கும் பொழுது,
இன்று மலையக வரலாற்றில் முக்கியமான தினமாகும்.
பெருந்தோட்ட மக்கள் வாழும் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இந்திய அரசாங்கத்தின் உதவியினூடாக 4000 வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் மலையக அரசியல் தலைமைகளினால் வினைத்திறனுடனான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படாமையினால் தாமதமாகிக் கொண்டிருந்த இந்த வீடமைப்பு திட்டத்தினை துரிதமாக செயற்படுத்தும் வகையில் இன்று இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த 4000 வீடமைப்பு திட்டத்தினை முன்னெடுக்க முன்வந்தமைக்காக இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் நன்றி கூறுகின்றேன்.
எதிர்வரும் 24ஆம் திகதி முதல் கட்டமாக பூண்டுலோயா டன்சினன் பகுதியில் அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெறவிருக்கின்றது.
குறுகியகாலத்திற்குள் இந்த வீடமைப்புதிட்டத்தினை நிறைவு செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதோடு தொடர்ந்தும் இந்திய அரசாங்கத்துடன் இணைந்து பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை முன்னெடுக்க எதிர்ப்பார்த்துள்ளோம்” என தெரிவித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே. சிங்ஹா,
இந்திய அரசாங்கத்தின் ஐம்பதாயிரம் வீடமைப்பு திட்டத்தில் வட கிழக்கில் 45000வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில் மலையகத்தில் மத்திய மற்றும் ஊவா மாகாணத்திற்கென ஒதுக்கப்பட்ட 4000 வீடமைப்பு திட்டம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.
இதனை ஆரம்பிப்பதற்கான முதற்கட்டமாக இன்றைய தினம் இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது.
இந்த வீடமைப்பு திட்டத்திற்கு மேலதிகமாகவும் கல்வித்துறையிலும், கலாசாரத்துறையில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களை இந்திய அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது.
மேலும் இந்த வீடமைப்பு திட்டத்தினை துரிதகதியில் முன்னெடுக்க முன்னின்று செயற்படும் அமைச்சர் திகாம்பரம் அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் கருத்துரைத்தார்.
அதேவேளை மலையக பகுதிகளில் இந்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் மனோகணேசன், கல்வி
இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், பதுளை மாவட்டபாராளுமன்ற உறுப்பனர் வடிவேல் சுரேஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment