தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று தந்தை செல்வா குறிப்பிட்டார். தற்போது இது சற்று மாறி இறைவனின் கைகளில்தான் தமிழர்களின் தீர்வு உள்ளது எனக் கூறப்படுகின்றது. அதாவது தமிழர்களுக்குக் காவலனாக இருந்து தமிழர்களைக் காப்பாற்ற வேண்டுமென்ற கோரிக்கை இன்று
தமிழர்களுக்கான தீர்வினை இறைவனே வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்குமளவுக்கு தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் திசைமாறியுள்ளது.
தமிழ் மக்களைப் பொறுத்து முள்ளிவாய்க்காலில் தமது சொந்தங்கள், பந்தங்கள், சொத்துக்கள் என இழந்தது ஏராளம். ஆனால் மீள முடியாத இந்த இழப்புக்குள்ளும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தகர்ந்து போகவும் இல்லை, மூழ்கடிக்கப்படவும் இல்லை என்பதை தமிழ் மக்களின் மூச்சுக் காற்று உணர்த்தி நிற்கின்றது.
அப்படியானால் தமிழ்த் தலைமைகள் என்ன செய்கின்றன? கொள்ளிக்கு நெருப்பு எடுத்துக் கொடுக்கும் வேலையைச் செய்கின்றனவா என்ற கேள்வியை எழுப்பத் தூண்டுகின்றது. இந்தக் கேள்வி சற்றுக் கடினமானதுதான். ஆனால் தமிழ் மக்களிடையே இருந்து பரவலாக இந்தக் கேள்வி எழுப்பப்படுவதை தமிழ்த் தலைமைகள் மறுக்கமாட்டார்கள்.
இலங்கை குறித்து சர்வதேசம் இரண்டாகப் பிளவுபட்டிருந்தது. இது மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், இவ்வாறு பிரிந்து கிடந்த சர்வதேசத்தை ஒன்றாக்கினோம் என்று மாத்திரமல்ல உலகில் இலங்கைக்கென எதிரிகள் கிடையாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை மக்களுக்கு, குறிப்பாக சிங்கள மக்களுக்குப் பிரகடனப்படுத்தியுள்ளார். உண்மைதான் இலங்கை அரசாங்கம் என்ற வகையில் தனது இராஜதந்திர தொடர்புகள் மூலம் இந்த நிலையை உருவாக்கிக் கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கம் சர்வதேச ரீதியில் வெற்றிகளை ஈட்டும் பொழுதெல்லாம் தமிழ் மக்களுக்கென பெயர் அளவில் உள்ள நண்பர்களும் காணாமல் போய்விடுகின்றனர். இதுதான் வரலாறு. நல்லாட்சி அரசாங்கத்திலும் அதுதான் நடைபெறுகின்றது.
அதே வேளையில் இந்த வெற்றிகளை இலங்கை அரசாங்கம் தமிழர்களின் தலையைத் தடவிக் குட்டுவதை தமிழர்களுக்கு மட்டும் தெரியுமாறு குட்டி ஈட்டிக் கொள்கின்றது. உத்தேச அரசியலமைப்பு நிர்ணய சபை பெரும்பான்மை இன ஜனநாயகத்தை நிறுவுவதற்கான இலக்கை நோக்கிப் பயணிக்குமேயொழிய இன விவகாரத்துக்கான தீர்வு குறித்து ஆராயவோ தீர்வைக் காணவோ முன்வராது என்பதை இப்பந்தியில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.
அதாவது நம்ப வைத்துக் கழுத்தறுப்பது சிங்களப்பாணி. நம்பி பின் கெட்டு தமிழ் மக்களை ஏமாற்றி விடுவது தமிழ்த் தலைமைகளின் தளராத போக்காக உள்ளது. இதனை மீண்டும் அரங்கேற்ற சிங்களத் தலைமைகளும் தமிழ்த் தலைமைகளும் களத்தில் இறங்கி விட்டன.
2016 இல் தீர்வு நிச்சயம். நம்புங்கள் என்று சம்பந்தன் ஐயா தமிழ் மக்களுக்கு தெம்பூட்டினார்.
ஆனால் உத்தேச அரசியலமைப்பு நிர்ணய சபை இனப் பிரச்சினைக்கான தீர்வினை ஆராயாது என்று சுதந்திரக் கட்சி தனது பரிந்துரையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
(1) நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழித்தல்
(2) நியாயமான பிரதிநிதித்துவ தேர்தல் முறையை உறுதிப்படுத்துதல்.
(3) அனைத்துப் பிரஜைகளினதும் ஜனநாயக உரிமையைப் பலப்படுத்துதல்.
(4) தேசியப் பிரச்சினைக்கு அரசியலமைப்பு ரீதியிலான தீர்வொன்றை வழங்கக் கூடிய,
(5) தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்தி, சட்ட விதியை மதிக்கும் அரசியல் கலாசாரத்தை ஸ்தாபிக்கக் கூடிய,
(6) மனித கௌரவத்தை உறுதிப்படுத்தும் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் சுயாதீனத் தன்மைக்கும் உத்தரவாதமளித்து,
(7) பொறுப்புமிக்கதும் வகை கூறக் கூடியதுமான அரசாங்கமொன்றை மேம்படுத்தும் புதிய அரசியலமைப்பொன்றை சட்டவாக்கம் செய்தல் அவசியமாகின்றது.
என்ற மேற்குறிப்பிட்ட விடயங்களை நீக்குவதற்கு சுதந்திரக் கட்சியின் சார்பில் சுசில் பிரேம் ஜயந்தவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பந்திகள் நீக்கப்படுவதற்கு எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையிலும் சுதந்திரக் கட்சியின் சார்பில் மேற்கூறிய விடயங்களை சுதந்திரக் கட்சி பரிந்துரை செய்துள்ளது.
சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டில் இணைந்து கொண்டுள்ள ஐ.தே.க. வும் மேற்படி பந்திகள் நீக்கப்பட வேண்டுமென்ற திருத்தத்தை சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல முன்வைத்துள்ளார். அத்துடன் ‘இலங்கைக்கு புதிய அரசியலமைப்பொன்றை வகுத்தல்’ என்ற வசனத்தில் உள்ள ‘புதிய’ என்ற சொற்பதத்தையும் நீக்க வேண்டும் என்றும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் உத்தேசத் திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்புக் கூடாக தமிழர் விவகாரத்திற்குத் தீர்வு காணப்படும் என தமிழ் மக்களை கூட்டமைப்பு நம்புமாறு கூறுகின்றது.
ஆனால் மறுபுறம் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு உருவாக்கப்படவுள்ள நாடாளுமன்ற அரசியலமைப்பு நிர்ணய சபை இன விவகாரத்துக்கான தீர்வு குறித்து பேசக் கூடாது என இரு பெரும் கட்சிகளும் திருத்தப் பிரேரணையை முன் மொழியும் நிலையில் புதிய அரசியலமைப்புக்கூடான தீர்வு என்பது சாத்தியமா என்ற கேள்வி எழும்புவது நியாயமானதே.
அதாவது புதிய அரசியலமைப்புக்கூடாக இன விவகாரத்துக்கான தீர்வை நோக்கிக் கூட்டமைப்பு நகர்த்தும் காய்களின் பயணத்தை நல்லாட்சியில் இணைந்துள்ள சுதந்திரக் கட்சியும் ஐ.தே. கட்சியும் ஆரம்பத்திலேயே வழிமறித்து நிற்கின்றன.
நல்லாட்சிக்குள் கலகம் விளைவித்துக்கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ அணியினருக்குப் பணிந்து போகும் நல்லாட்சிக்காரர்கள் சம்பந்தன் ஐயாவுடன் இன விவகாரத்துக்கான தீர்வு விடயத்தில் சமரசத்திற்கு வருவதற்குத் தயாராக இல்லை.
அதே வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள எதிர்க் கட்சிப் பதவி என்பது சர்வதேசத்தை ஆசுவாசப்படுத்த நல்லாட்சிக்காரர்கள் நகர்த்திய காயாகும்.
இன்றைய நிலையில் சர்வதேச ரீதியில் இராஜதந்திர வெற்றிகளை ஈட்டிக் கொள்வதற்கு எதிர்க் கட்சிப் பதவி தமிழர்களின் கைகளில் இருப்பது அவசியம் என்று நல்லாட்சி கருதுகின்றது.
எனவேதான் எதிர்க் கட்சிப் பதவியை அரசாங்கத்திற்குள் முளைவிட்டு கிளை பரப்பி நிற்கும் மஹிந்த அணியினரிடம் பறி கொடுக்காமல் பார்ப்பதில் நல்லாட்சி அரசாங்கம் மிகக் கவனமாக இருக்கின்றது. அதிருப்தியாளர்களுக்கு 5 கட்சித் தலைவர்கள் அந்தஸ்த்துடன் இயங்க அனுமதியளித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் மைத்திரிபால சிறிசேனவும் களத்தில் நின்றனர். அவ்வேளையில் பரிசில் உள்ள நண்பர் ச.கிருபாகரன் இந்தத் தேர்தலில் யார் வெல்வது நல்லது என்று என்னிடம் வினாவினார். மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவதே தமிழர்களின் வாழ்வில் விடிவு பெற வழி வகுக்கும் என்று கூறினேன். ஏனெனில் மஹிந்தவின் வெற்றி அவ்வேளையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் எழுந்த நெருக்கடி நிலையை மேலும் இறுக்கமடைவதற்கு வழி வகுப்பதுடன் சில வேளைகளில் இன விவகாரத்துக்கான தீர்வுக்கு களம் திறந்திருக்கலாம்
இதற்கு மாறாக மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவாராயின் இலங்கைக்கெதிரான சர்வதேச நெருக்கடிகள் தகர்ந்து தணிந்து போவதற்கே வழி வகுக்கும் என்றும் குறிப்பிட்டேன். நண்பர் கிருபாகரனும் இந்தக் கருத்துடன் ஒத்துப் போவதாகத் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணைந்த நல்லாட்சி சர்வதேச ரீதியில் ஈட்டிக் கொண்ட வெற்றிகள் கண்முன்னே விரிந்து கிடக்கின்றன.
அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலம் தாழ்த்தாது விரைந்து நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
இல்லையேல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கூட்டமைப்பினருக்கு நம்பிக்கையூட்டி கழுத்தறுத்தது போல் நல்லாட்சியினரும் செய்யமாட்டார்கள் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.
நல்லாட்சி அரசாங்கத்தின் அரவணைப்பு, பரிவு, பாசம் அனைத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை என்ற ஆற்றினைக் கடக்கும் வரைதான். ஆற்றைக் கடந்த பின் நீயாரோ, நான் யாரோ என்ற வழமையான கதையாகவே அமையும்.
இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்களுக்காக சம்பந்தன் ஐயா ஏதாவது சாதிக்க வேண்டுமென நினைத்தால் எதிர்க் கட்சிப் பதவியை துறப்பதே மேல்.
சம்பந்தன் ஐயா எதிர்க் கட்சிப் பதவியைத் துறப்பதானது நல்லாட்சிக்காரர்களுக்கு அதிர்ச்சி வைத்தியமாக அமையும்.
இன விவகாரத்துக்கான தீர்வில் சம்பந்தன் ஐயாவுடன் சமரசத்திற்கு வர விரும்பாத நல்லாட்சிக்காரர்கள் கீழ் இறங்கிவர சம்பந்தன் ஐயாவின் எதிர்க் கட்சிப் பதவித் துறப்பு வழி சமைக்கலாம்.
அது மாத்திரமல்ல நல்லாட்சிக்காரர்களின் சுய உருவத்தை சர்வதேசத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்வும் உதவும்.
அத்துடன் எதிர்க் கட்சிப் பதவியைக் கையில் வைத்துக் கொண்டு தமிழின விரோதப் போக்கிற்கு நல்லாட்சிக்காரர்களுக்குத் துணை போய் இறுதியில் ஏமாற்றப்பட்டதாக அறிக்கை விடுவதில் அர்த்தமில்லை என்ற தமிழ் மக்களின் உணர்வுகளையும் இங்கு முன்வைக்கின்றோம்.
வி.தேவராஜ்
தமிழ்தந்தி
தமிழ்தந்தி
0 comments:
Post a Comment