பிள்ளையான் என
அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உட்பட நால்வரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் பிள்ளையான் உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நால்வரும் மட்டக்களப்பு நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் 09/03/2016 காலை ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது சந்தேகநபர்கள் சார்பாகவும், குற்றப்புலனாய்வுப் பிரிவினராலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டதுடன், அவற்றை ஆராய்ந்த பின்னர், சந்தேகநபர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன், அந்த கட்சியின் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் என்றழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஷ்ணானந்தராஜா, கஜன் மாமா என அழைக்கப்படும் ரங்கசாமி கனகநாயகம் மற்றும் எம்.எல். கலீல் ஆகியோரின் விளக்கமறியல் நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக் கொலைசெய்யப்பட்டிருந்தார்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதமளவில் சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment