ஊடகங்களைக் கட்டுபடுத்தும் நோக்கில் செய்தி ஊடகங்களை பதிவுசெய்யுமாறு கோரவில்லை. இணைய ஊடகவியலாளர்களுக்கும் அங்கீகாரம்
வழங்கும் நோக்கிலேயே செய்தி இணையங்களைப் பதிவுசெய்யுமாறு அரசாங்கம் கோரியிருப்பதாக பதில் ஊடகத்துறை அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன தெரிவித்தார்.
ஊடக அமைச்சில் பதிவுசெய்யப்படும் செய்தி இணையத்தளங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்ளுக்கு அமைச்சின் ஊடக அடையாள அட்டை வழங்கமுடியும். எனவே, அவர்களும் இடையூறு இன்றி செய்தி சேகரிப்பில் ஈடுபட முடியும் என அவர் குறிப்பிட்டார்.
இணையத்தளங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக சில ஊடகங்கள் தவறான செய்திகளை வழங்கி வருகின்றன என்றும் தெரிவித்தார். செய்தி இணையத்தளங்களைப் பதிவுசெய்யுமாறு ஊடகத்துறை அமைச்சு பத்திரிகைகளில் விளம்பரங்களைப் பிரசுரித்திருந்தது. இது தொடர்பில் கேட்டபோதே ஊடகத்துறை பதில் அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இது செய்தி இணையத்தளங்களுக்கு எதிரான நடவடிக்கை அல்ல. செய்தி இணையங்கள் பொறுப்பு வாய்தவையாக செயற்படுவதுடன், உரிய அங்கீகாரத்துடன் செயற்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். அமைச்சின்கீழ் பதிவுசெய்வதன் ஊடாக பொறுப்புவாய்ந்த ஊடகங்களாக அவை மாற்றமடையும் என்றும் தெரிவித்தார்.
செய்தி இணையத்தளங்களைப் பதிவுசெய்வதற்காக விசேடமான சட்டங்கள் எதுவும் இல்லையென்று சுட்டிக்காட்டிய அவர், இணையத்தளங்களைப் பதிவுசெய்யும் செயற்பாடு 2012ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட முடிவு. இந்த நடைமுறையைத் தொடர்ந்தும் பின்பற்றுவதற்கு அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக அவர் கூறினார்.
0 comments:
Post a Comment