நடைமுறையில் உள்ள அரசியல் யாப்பில் திருத்தமா அல்லது புதிய அரசியல் யாப்பு உருவா
க்கமா என்பது குறித்து அரசும் தெளிவில்லாத நிலையில் இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றிலும் மாறுபட்ட கருத்தக்கள் எதிரொலிப்பதோடு, அதில் திருத்தம் மட்டுமே செய்ய வேண்டும் என்ற பேரினவாதக் கருத்துக்களே மேலோங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்ற மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்த கொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதியும் இது தொடர்பில் எந்த முடிவுகளும் இதுவரையில் எடுக்கவில்லை என தெரிவித்திருப்பது, தமிழ் மக்கள் மத்தியில் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என அவர் கூறியுள்ளார்.
இந்த நல்லாட்சியை உருவாக்க தமிழ் மக்கள் பெறும் பங்களிப்பை வழங்கியதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தொடர்ந்து வாக்களித்து அதன் முக்கியத்துவத்தை வெளியிட்டு, அதற்கான அங்கிகாரத்தையும் வழங்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், மக்கள் கருத்தென்பது சிங்கள பெரும்பான்மையை மையப்படுத்தியே ஜனாதிபதி வெளியிட்டுள்ளாரா? என்ற கேள்வியும் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக அவர் கூட்டிக்காட்டியுள்ளார்.
இன்று ஒரு சில சிங்களத் தலைவர்களைத் தவிர, பல தலைவர்கள் தமிழ் மக்களுக்கான உரிமைகள் வழங்கப்படக்கூடாது என்பதில் சிங்கள மக்களைத் திசைதிருப்பிக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
எனவே, இந்த விடயத்தில் சிங்கள மக்களின் கருத்து எதுவாக அமையும் என்பது அனைவரும் அறிந்த விடயமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கருத்திற்கே ஜனாதிபதி முக்கியத்துவம் அளிக்கப் போகின்றாரா என்ற கேள்வியும் தமிழ் மக்களிடம் இயல்பாகவே எழுந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வை பெற்றுக்கொடுப்பதில் ஜனாதிபதி ஆர்வமாக இருந்தாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை நிவர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் அவர் இருப்பதால், இந்த விடயத்தில் அவரும் தடுமாறிக் கொண்டிருப்பதாக பொன்.செல்வராசா கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவும் 13வது அரசியல் திருத்தத்தை செய்வதற்கு மக்கள் கருத்தறிய முற்பட்டிருந்தால் இன்று மாகாண சபையும் இருந்திருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
சவால்களுக்கு மத்தியில் துணிச்சலுடன் மேற்கொண்ட அந்த முயற்சியால் தான், அரைகுறை அதிகாரங்களுடன் மாகாண சபைகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தும் இந்த நல்லாட்சியில் கூட அந்த அதிகாரங்கள் இன்னும் கையளிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இருப்பதையே கொடுப்பதற்கு அஞ்சும் இன்றைய நல்லாட்சியும், சிங்களப் பேரினவாதத்திற்கு அடிபணிந்து செல்லும் வழக்கமான வரலாற்றுப் பின்னணியுடன் தான் சங்கமிக்கப்போகின்றதா என்பதே தமிழ் மக்களிடம் எழுந்துள்ள மிகப் பெரிய கேள்வி என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment