பாடசாலை மாணவர்கள் பேருந்தினை மறித்தும் அவர்களை பேருந்தில் ஏற்றாது செல்வதாக யாழ்.சாலைக்கு மாணவர்கள் தொடர்ச்சியாக முறைப்பாடு செய்து வருகின்றனர். எனவே அவர்களை உதாசீனம் செய்யாமல் பேருந்தில் ஏற்றிச் செல்லவேண்டும் என யாழ். சாலை முகாமையாளர் செ.குலபாலசெல்வம் சகல பேருந்துக் குழுவினருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மாணவர்கள் எமது நாட்டின் எதிர்காலம். அவர்களது கல்வி மீது நமது அரசாங்கம் அக்கறை கொண்டு அவர்களுக்கு போக்குவரத்தின் மொத்த பெறுமதி தொகையில் பத்து வீதத்தினை அவர்களிடம் அறவிட்டு அவர்களுக்கு பருவகாலச் சீட்டு வழங்கி 90 வீதத்தினை அரசாங்கம் செலுத்துகின்றது.
அத்துடன் ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளின் கல்வி கற்று நல்ல நிலைக்கு வரவேண்டுமென்ற எதிர்பார்ப்பில் தமது சொந்த சுகதுக்கங்களை ஒதுக்கி பிள்ளைகளின் கல்வியினை மட்டும் கருத்திற்கொண்டு நேரத்துக்குள் பிள்ளைகளை பாடசாலை செல்வதற்கு தயார்படுத்தி பெற்றோர் பேருந்திற்காக காத்திருக்கும் வேளையில் எமது பேருந்து குழுவினர்கள் பாடசாலை சீருடையில் நிற்கும் பிள்ளையினை பேருந்தில் ஏற்றாது செல்லும் தருணத்தில் அப்பிள்ளையினதும் பெற்றோரினதும் மனக் குமுறலை சற்று அவ்வாறு சிந்தித்து பாருங்கள்.
எனவே யாழ்.சாலையில் கடமையாற்றும் அனைத்து பேருந்து குழுவினர்களும் பாடசாலை செல்லும் மாணவர்கள் பாடசாலை சீருடையில் பேருந்தினை மறிக்கும் போது அவர்களை ஏற்றிச் செல்லுதல்வேண்டும் இது தொடர்பாக இனிவருங்காலங்களில் எந்தவித அறிவுறுத்தல்களும் வழங்கப்படமாட்டாது.
எமது வீதிப் பரிசோதனை அணியினர் இவ்வாறான முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பேருந்து குழுவினர்களுக்கு எதிராக சபை விதிமுறைப்படி கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment