நவீன உலகத்துக்கு ஏற்றவாறு வரிமுறைகளில் மாற்றம் செய்வது குறித்து அரசு கவனம் செலுத்தியுள்ளது. இதனால் புதியவரிமுறை மற்றும்
மேம்படுத்தப்பட்ட வருமானத்தை அதிகரிப்பதற்கான முறைமையை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக பிரதமர் நேற்று(08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ராஜபக்ஷ ரெஜிமென்ட் நாட்டை சிக்கவைத்துள்ள பொருளாதார பொறியில் இருந்து நாட்டை மீட்க உரிய பொருளாதார கொள்கையை முன்னெடுத்து பொருளாதார வளர்ச்சி வீதத்தை 6 வீதமாகப் பேண இருப்பதாக தெரிவித்த அவர், வரிக்கொள்கைகளில் திருத்தம் மேற்கொள்ள இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த அரசாங்கம் மறைவாக பெற்ற கடன்கள் குறித்து முழுமையான தகவல் இல்லாத போதும் அது 10,000 பில்லியனாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட அவர், அமெரிக்க தேர்தல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெ ளியேறும் பிரித்தானிய திட்டம், மத்திய கிழக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதல், உலகப் பொருளாதார நெருக்கடி என்பவற்றினால் இலங்கைக்கும் தாக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கு முன்கூட்டி முகங்கொடுக்க தயாராக வேண்டியிருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், ராஜபக்ஷ ரெஜிமென்ட் போன்று கடன் பிரச்சினைக்குத் தீர்வு காணப்போவதில்லை எனச் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஜனவரி 8ஆம் திகதி புரட்சியின் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வருகையில் நாட்டின் பொருளாதார நிலை மிக மோசமாகக் காணப்பட்டது. கடனை செலுத்த மேலும் கடன்பெற்றும், வட்டியை செலுத்த மேலும் கடன்பெற்றுவரும் நிலையே காணப்பட்டது. ஒரு குடும்பம் மாத்திரமே அரச குடும்பமாக இருந்தது. நாம் இந்த நிலையை மாற்றியமைத்தோம். பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்த மக்களுக்கு பல நிவாரணங்களை வழங்கினோம். ஆனால் வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதார நிலைமையை தூக்கி நிறுத்துவது இலகுவான காரியமாக இருக்கவில்லை. கடந்த அரசாங்கம் பெற்றிருந்த பெருந்தொகை கடனை மதிப்பிடமுடியாதிருந்தது. 2016 வரவுசெலவுத்திட்டம் தயாரிக்கப்படுகையில் முழுக் கடன்தொகையை அறியமுடியாதிருந்தது. காணாமல் போனவர்கள் இறந்திருப்பதாக தகவல் இருந்தாலும் அதனை உறுதிப்படுத்த முடியாதிருப்பதைப் போன்றே இந்தக் கடன் குறித்தும் தகவல் பெறமுடியாதிருந்தது.
சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி என்பவற்றுடன் பேச்சுநடத்தி கடந்தகால கடன் குறித்து கணக்காய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தோம். இதன்படி 2015 இறுதியில் செலுத்தவேண்டிய மொத்த கடன்தொகை 8475 பில்லியன் என மதிப்பிடப்பட்டது. 2016ஆம் ஆண்டில் 1209 பில்லியன் ரூபா செலுத்தவேண்டியிருந்தது. அரச தொழில்முயற்சிகளுக்கு வழங்கவேண்டிய கடன் இவற்றில் உள்ளடக்கப்படவில்லை. இது 1042.8 பில்லியன் ரூபாவாகும். பெற்றோலியக் கூட்டுத்தாபன கடன் 365 பில்லியன், துறைமுக அதிகாரசபை கடன் 260 பில்லியன், விமானச் சேவைகடன் 211 பில்லியன் என பட்டியல் நீண்டு செல்கிறது.
ராஜபக்ஷ ரெஜிமன்ட் எமது நாட்டை கடன்பொறியில் சிக்கவைத்தது. கடந்த அரசாங்கத்தின் ஒருதலைப்பட்சமான செயற்பாடுகளால் எமது நாடு 9.5 ட்ரில்லியன் கடன்பொறியில் சிக்கியிருக்கிறது. இந்தத் தொகை 10 ட்ரில்லியனாக அதிகரிக்கலாம். இணக்கப்பாட்டு அரசாங்கம் இந்த சவாலில் வெற்றிகொள்ளும்.
0 comments:
Post a Comment