தகர்ந்து போகும் வாக்குறுதிகளின்’ வழியில் நல்லாட்சி அரசாங்கமும் பயணிக்கின்றது.- வி.தேவராஜ்

 

தேசிய நல்லாட்சி அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை எதிர்பார்ப்பு அனைத்தும் தகர்ந்து போய்க் கொண்டிருப்பதாக தமிழ் மக்கள் தற்பொழுது உணரத் தொடங்கி விட்டனர்.நல்லாட்சி அரசாங்கம் ‘தகர்ந்து போகும் வாக்குறுதிகளுடன்’ வரவில்லை என்று ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் பிரகடனப்படுத்தியது மாத்திரமல்ல மனித உரிமை குறித்த விவகாரத்திற்கு ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு அனுசரணையும் வழங்கியது.


தமது வாக்குறுதிகள் ‘தகர்ந்து போகும் வாக்குறுதிகள்’ அல்ல என பிரகடனப்படுத்திய சொற் பிரயோகங்களின் சத்தம் அடங்குவதற்குள்ளேயே இலங்கைத் தரப்பிலிருந்து தனது பிரகடனத்தையே தகர்த்தெறியும் வார்த்தைப் பிரயோகங்களை உதிர்க்கத் தொடங்கி விட்டது. மனித உரிமை மீறல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்றிக் கொள்வதை இலக்காகக் கொண்டு நல்லாட்சி அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் போன்று காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை மென்மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினரின் செயற்பாடுகளும் உள்ளன.


எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவை மகா நாட்டில் சமர்ப்பிப்பதற்கென மனித உரிமை மீறல்களுடன் சம்பந்தப்படாத ‘தமது நல்லெண்ண’ நகர்வுகளை முன் மொழிவதற்கான ஏற்பாடுகளில் நல்லாட்சி அரசாங்கம் தயார் நிலையில் உள்ளது.
(1) தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு விட்டது.


(2) உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளடக்கப்பட்டு இருந்த காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன.
(3) ஜனாதிபதியைக் கொல்ல முனைந்தவர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை என்பன போன்ற விடயங்களை நல்லாட்சி அரசாங்கத்தின் சாதனைகளாக பட்டியல் இடப்பட உள்ளன.


இந்தப் பட்டியல்களால் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தோன்றும் என்பதோ தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கான தீர்வுகளை விரைந்து கொண்டு வரும் நிலையிலோ இல்லை என்பதே தமிழ் மக்களின் இன்றைய நிலைப்பாடாக இருக்கின்றது. இந்தப் பட்டியல்கள் நல்லாட்சியை எதிர்பார்த்தஇ அதனைக் கொண்டு வருவதற்குப் பாடுபட்ட வெளிநாட்டு சக்திகளுக்கு ஒரு பெரிய விடயமாக தெரியலாம். ஆனால் சிங்களத் தலைமைகள் சர்வதேச சமூகத்திற்கு இது போன்று பல முறை காட்சிப்படுத்தியதை சர்வதேச சமூகம் இலகுவாக மறந்து விடுவதற்கில்லை. ஆனால் இன்றைய நல்லாட்சி அரசாங்கம் கடந்த கால அரசாங்கங்களைப் போல் தகர்ந்து போகும் வாக்குறுதிகளுடன் வரவில்லை என்ற பிரகடனத்துடன் வந்த போதும் இலங்கையின் முன்னைய அரசாங்கங்களின் வழியிலேயே நடக்கின்றது என்பதுதான் விசித்திரமானது.


இலங்கையின் நல்லாட்சி அரசாங்கத்தைப் பொறுத்து மனித உரிமை மீறல்களோ அல்லது இன விவகாரத்திற்கான தீர்வோ குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்ற விடயத்தில் மிக உறுதியாக இருக்கின்றது. இந்த விடயங்களில் இருந்து சர்வதேச சமூகத்தை எவ்வாறு திசை திருப்புவது என்பது சிங்கள இராஜதந்திரத்திற்கு நன்றாகவே தெரியும். இந்த நகர்வுகளுக்கு அச்சாணியாக இருக்கப் போகிறவர்கள் இலங்கையில் உள்ள தமிழ்த் தலைமைத்துவங்களும் புலம்பெயர் அமைப்புக்களின் ஒரு பகுதியினரும் என்பது தற்போதைய நிகழ்வுகள் உணர்த்தி நிற்கின்றன. இந்த இரு பகுதியினரையும் தமது வலைக்குள் வீழ்த்துவதில் நல்லாட்சி அரசாங்கம் பெருமளவில் வெற்றியைக் கண்டுள்ளது.


அந்த வகையில் நல்லாட்சி அரசாங்கத்தைப் பொறுத்து சர்வதேச ரீதியில் இராஜதந்திர ரீதியிலான ஒரு இறுக்கமான வலைப் பின்னலை ஏற்படுத்திக் கொள்வதும் பொருளாதார நன்மைகளை குவித்துக் கொள்வதிலேயுமே குறியாக இருக்கின்றது.


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிராக எந்தப் பேயுடனும் கூட்டுச் சேரத் தயார் என முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன இஸ்ரேலுடனான உறவினை மேற்கொண்ட பொழுது தெரிவித்தார். அந்த நிலைப்பாட்டிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் சரி இன்றைய நல்லாட்சி அரசாங்கமும் சரி சற்றும் விலகாது ஒரே நேர் கோட்டில் பயணித்துக் கொண்டிருக்கின்றன. 2009 ஆம் ஆண்டு போர் முற்றுப் பெறும் வரை மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் சகல பேய்களுடனும் கூட்டுச் சேர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதில் வெற்றி கண்டது. ஆனால் இந்த வெற்றிக்குப் பிறகு மஹிந்த ராஜபக்ஷ தனக்கென சில பேய்களை மாத்திரம் கூட்டுச் சேர்த்துக் கொண்டு அரசியல் பயணத்தை ஆரம்பிக்கத் தொடங்கினார். இது அவருடைய கூட்டுக்குள் இடம்பெறாத பேய்களுக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தின.


இதன் பெறுபேறாகவே நல்லாட்சி மலர்ந்தது. உண்மையில் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிரான உணர்வலைகளும் நடவடிக்கைகளும் உருப்பெற்றது மாத்திரமல்ல தமிழ் மக்கள் குறித்த கரிசனையும் சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் பெற மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் நகர்வுகள் வழி வகுத்தன. இந்த சர்வதேச மாற்றத்தை தமிழ்த் தலைமைத்துவங்களும் புலம்பெயர் அமைப்புக்களும் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளத் தவறின. ஆனால் சிங்கள ராஜதந்திரம் இதனால் இலங்கைக்கு ஏற்படவுள்ள அபாயத்தை சரியாக கணக்கிட்டதினால் மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டுக்குள் இருந்து விலத்தப்பட்ட சர்வதேச சக்திகளுடன் கை கோர்த்து இலங்கையில் அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டது. சிங்கள ராஜதந்திரம் சர்வதேச ரீதியில் பெற்ற வெற்றியை ஸ்திரப்படுத்திக் கொள்வதிலும் அதனூடாக பொருளாதார அனுகூலங்களை அறுவடை செய்து கொள்வதிலுமே இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரலாகவுள்ளது. இதனை இலக்காகக் கொண்டதாகவே ஜனாதிபதி மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களது வெளிநாட்டுப் பயணங்கள் திட்டமிடப்பட்டு முன்னகர்த்தப்படுகின்றன.


நல்லாட்சி தேசிய அரசாங்கத்தின் தோற்றம் தமிழ் பேசும் மக்கள் குறித்து ஒரு ‘கானல் நீர்’ என்பதை அவர்கள் தற்பொழுது உணரத் தொடங்கி விட்டனர். எனவேதான் ஐ.நா. மனித உரிமைப் பேரவை தமிழ் மக்களுக்கு நீதியை தரப்போவதில்லை என்றும் நல்லாட்சி அரசாங்கம் இன விவகாரத்திற்கான தீர்வினை கொண்டு வரப் போவதில்லை என்ற உணர்வுகள் தமிழ் மக்களிடமிருந்து உரத்து எழும்பத் தொடங்கியுள்ளது.


புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதன் மூலம் தமிழர் விவகாரத்திற்கு தீர்வு காணப்படும் என நல்லாட்சி அரசாங்கத்தின் சார்பில் திரும்பத் திரும்ப கூறப்பட்ட பொழுதும் அந்தக் கூற்றுக்கள் அனைத்தும் சர்வதேச சமூகத்தையும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையையும் ஆசுவாசப்படுத்துவதற்காகவே கூறப்படுகின்ற வழமையான சிங்கள பாணி என தமிழ் மக்கள் கூறத் தொடங்கியுள்ளனர்.


அந்த வகையில் நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய அரசியல் அமைப்பு என்பது ‘பெரும்பான்மை இன ஜனநாயகத்தை’ உறுதிப்படுத்திக் கொள்வதற்கான நகர்வே தவிர வேறொன்றுமில்லை.

கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் அமைப்புக்கள் சிறுபான்மையின மக்களின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டதல்ல என்ற குற்றச் சாட்டைத் துடைத்தெறியும் வகையில் தமிழ் பேசும் மக்களின் ஆதரவுடன் ‘பெரும்பான்மை இன ஜனநாயகத்தை’ உறுதிப்படுத்திக் கொள்வதையே நல்லாட்சி அரசாங்கம் இலக்காகக் கொண்டு செயற்படுகின்றது.


புதிய அரசியல் அமைப்பில் தமிழ் மக்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்துவது தொடர்பாக தமிழ்த் தலைமைகள் மௌனம் சாதித்து வந்த அதே வேளையில் 2016 இல் புதிய அரசியல் அமைப்பில் தீர்வு நிச்சயம் என்று மாத்திரமே கூறி வந்தன. ஆனால் தமிழ் மக்கள் பேரவையின் பிரவேசத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சமஷ்டி குறித்த கருத்தியலை முன் வைக்கத் தொடங்கியுள்ளது. அதற்கும் அப்பால் தற்பொழுது கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தினர் அளித்த வாக்குறுதிக்கமைய சமஷ்டி முறையிலான தீர்வினை வழங்குவது அவர்களுடைய பொறுப்பு என தன்னைச் சந்தித்த பிரித்தானிய அமைப்பினருடனான சந்திப்பில் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. நல்லாட்சி அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒற்றையாட்சிக்குள்ளேயே புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள நிலையில் கூட்டமைப்பின் சமஷ்டி குறித்த விடயங்கள் எவ்வாறு புதிய அரசியலமைப்பில் இடம்பெறும் என்ற தமிழ் மக்களின் கேள்விக்கு கூட்டமைப்பினரே பதில் கூற வேண்டும்.


கிடைக்கும் தகவல்களின்படி ஒற்றையாட்சி குறித்த இணக்கப்பாட்டுக்கு கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்துடன் வந்துள்ளதாக அவர்களுக்கிடையிலான கடிதப் பரிமாறல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

புதிய அரசியலமைப்புக்கான வரைபு ஏற்கனவே வரையப்பட்டுள்ளதாகவும் அந்த வரைபுகள் குறித்த பிரதிகள் பிரதம மந்திரிஇ ஜனாதிபதிஇ எதிர்க் கட்சித் தலைவர்இ முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரின் கைகளில் இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. புதிய அரசியலமைப்பு குறித்த வரைபை கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண தயாரித்துள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது. அந்த வகையில் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புக்கான வரைபு எதிர்க் கட்சித் தலைவரின் அங்கீகாரத்துடன் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் நிறைவேற்றப்படவுள்ளது என்பதே உண்மையாகும். இந்தப் புதிய யாப்பு எந்தளவுக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வினைக் கொண்டு வரும் என்பது விரைவில் வெளிச்சத்திற்கு வரும்.V.Thavaraj

Thamilthanthi

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com