கேப்பாபிலவு மக்களுடைய காணிகள் மற்றும் முறிகண்டிகுளம் ஆகியவற்றை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருப்பதாகவும் கடல் வளத்தை தென்பகுதி சிங்கள மீனவர்கள் சுரண்டிச் செல்வதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.
தமது சொந்த இடத்தில் குடியமர்த்துமாறு கோரி முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு மாதிரிக்கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொண்டனர்.
இந்த போராட்டத்திற்கு சென்ற, நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டார்.
ஆயுதப் போராட்டம் மீண்டும் வெடிக்காதிருக்க நல்லாட்சி அரசு முன்வர வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், கேப்பாபிலவு மக்கள் தமது பூர்விக நிலத்தை விடுவிக்குமாறு கோரி அமைதியான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்த போராட்டத்தில் நான் மிகுந்த மன வேதனையோடு பங்கு பற்றுகிறேன். யுத்தத்திலே பாரிய இழப்புக்களை சந்தித்த மக்கள், இடம்பெயர்ந்து மீள்குடியேறி கடந்த ஏழு வருடங்களாக இன்றும் ஆகாரமின்றி, நீரின்றி தமது உரிமைகளை, அடிப்படை வசதிகளை கோரி இவர்கள் போராடுவது மிகவும் வேதனைக்குரியது.
நல்லாட்சி அரசு உருவாகி ஒரு வருடம் கடந்தும் மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை மிகவும் வேதனைக்குரியது.
இவர்களது பூர்வீக நிலங்களை கையகப்படுத்தி வைத்திருப்பது மட்டமல்ல, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பங்கமேற்படுத்தும் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தவகையில் இம்மக்களுடைய காணிகளை இராணுவம் வைத்திருக்கின்றது. முறிகண்டி குளத்தை 59 ஆவது படைப்பிரிவு கையகப்படுத்தி வைத்திருக்கிறது. கடல் வளத்தை தென்பகுதி சிங்கள மீனவர்கள் சுரண்டிச்செல்கின்றனர்.
இவ்வாறு எமது மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பல்வேறு செயற்பாட்டை பல்வேறு தரப்பினரும் மேற்கொண்டு வருகின்றனர். காடழிப்பு இடம்பெறுகிறது.
ஆகவே, இந்த நல்லாட்சி அரசை நான் மிகவும் பணிவாக வேண்டுவது, எமது மக்களது அடிப்படைத் தேவைகளை, அடிப்படைப் பிரச்சினையை இனம்கண்டு அவர்களது செந்த நிலங்களை அவர்களிடம் கையளித்து எமது மக்களின் இயல்பு வாழ்கைக்கு வழிசமைத்து கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறான சாத்வீகப் போராட்டங்கள் மீண்டும் ஆயுதப் போராட்டமாக வெடிக்காதிருக்க நல்லாட்சி அரசு முன்வர வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
0 comments:
Post a Comment