தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள் மேலும் வலுப்பெறாத வகையில் ஸ்ரீலங்காவின் வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். வெளியுலக இராஜதந்திர மட்டத்தில் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் தமிழ்த் தேசியம் என்ற அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்காமல் ஸ்ரீலங்காவின் தேசியம் என்ற வகையில் தீர்வுக்கான வேலைத் திட்டங்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்டது என்றும் அதன் தொடர்ச்சியாக மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் செயற்படுவதாகவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அமெரிக்கா, இந்தியா. பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளின் உதவிகளை பெற்று யுத்தத்தை நடத்தியது. பின்னர் அமெரிக்க எதிர்ப்பு நாடுகளின் ஒத்துழைப்புக்களுடன் பொருளாதார உதவிகளைப் பெற்றது.
இதனால் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் போர்க்குற்ற விசாரணையை முன்நிறுத்தி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தது. ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதன் காரணமாக மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தார். மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்று ஜனாதிபதியாக பதவியேற்றார். நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயருடன் ஆட்சிக்கு வந்த அவர் தற்போது தமிழர் விவகாரத்தில் தொடர்ந்தும் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் பின்பற்றிய வெளியுறவுக் கொள்கையை பின்னபற்றி வருகின்றார்.
ஆனால் ஸ்ரீலங்காவின் நலன் கருதி அமெரிக்க எதிர்ப்பு நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளை குறைத்து அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளுடன் கூடுதலான தொடர்புகளை பேணி வருவதாகவும் அந்த நாடுகளின் ஆலோசனையுடன் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பொருளாதார உதவிகளை பெற்று வருவதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆகவே நல்லாட்சி அரசாங்கத்தின் இந்த வெளியுறவுக் கொள்கை தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளுக்கு ஆபத்தானது என்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகள் இராஜதந்திரிகளை சந்தித்து பேச வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
0 comments:
Post a Comment