வவுனியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிகள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களின் செயற்பாடு குறித்து பரசங்குளம் மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாவது,
வவுனியா வடக்கு, புளியங்குளம் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள பரசங்குளம் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றினால் புனரமைக்கப்பட்டு அதன் கீழுள்ள வயல்நிலங்கள் காணியற்ற எமக்கு ஒரு ஏக்கர் வீதம் வழங்குவதாக அரச அதிகாரிகள் உறுதிமொழி வழங்கி அந்த குளமும் புனரமைக்கபட்டது.
தற்போது புனரமைப்பு வேலைகள் முடிவடையும் நிலையில் காணிகள் எமது பகுதியைச் சேர்ந்த காணியற்றவர்களுக்கு வழங்கப்படாது வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் மற்றும் எமது பகுதி கிராம அலுவலர் தனுஜா ஆகியோர் இணைந்து அதனை பலருக்கும் வழங்கியுள்ளனர்.
அங்கு நெல் பயிடப்பட்டு அவை தற்போது பயிர்செய்கை நிலங்களாகவுள்ளன. எமக்கு வழங்குவதாக கூறிய வயல்நிலம் இங்குள்ள எவருக்கும் வழங்கப்படாத நிலையில் அங்கு பயிரிடுவது யார்? இங்கு மோசடி இடம்பெற்றுள்ளதாகவும், எமக்கு தீர்வைப் பெற்றுத் தருமாறும் வடமாகாண முதலமைச்சர் மற்றும் வன்னி மாவட்ட எம்.பிகளான சாள்ஸ்நிர்மலநாதன், சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா, இ.இந்திரராசா, ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோருக்கும் தெரியப்படுத்தியிருந்தோம்.
தாம் பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி எமக்கு காணிகள் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுப்பதாக எம்மிடம் கூறியிருந்தனர். ஊடகங்களிலும் சிலர் தெரியப்படுத்தியிருந்தனர். ஆனால் எமக்கு வழங்குவதற்கு ஒதுக்கப்பட்ட காணியில் விதைக்கப்பட்டு அறுவடையும் வரப் போகிறது. மக்கள் பிரதிநிதிகள் இது வரை கவனம் செலுத்தவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment