மும்பையில் ஏர் இந்தியா விமானத்தின் இயந்திரம் ஒன்றில் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் இழுத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அந்த விமானத்தின் விமானி மற்றும் இணை விமானியை ஏர் இந்தியா நிறுவனம் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் கீழ் இயங்கும் விமான விபத்துக்கள் புலனாய்வு அலுவலகம் அதிகாரபூர்வ விசாரணை ஒன்றைத் தொடங்கியிருக்கிறது.
மும்பையிலிருந்து ஹைதராபாதுக்கு செல்லவிருந்த ஏர் இந்தியா ஏ.ஐ 619 விமானம் புதனன்று மும்பையை விட்டுப் புறப்படும் நிலையில், பின்நோக்கி தள்ளப்படும் போது நடந்தது.
ஒரு சமிக்ஞையைத் தவறாகப் புரிந்து கொண்ட விமானிகள் இயந்திரத்தை இயக்கவேண்டிய காலத்துக்கு முன்னரே இயக்கத் தொடங்கியதால் இது நேரிட்டதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் கூறியது.
ரவி சுப்ரமணியன் என்று அடையாளம் காணப்பட்ட இந்த தொழில்நுட்ப ஊழியரின் உடல் மிகவும் மோசமாக சிதைந்திருந்த நிலையில் அதை பிரேத பரிசோதனைக்குக் கூட அனுப்ப முடியவில்லை என்று பி.டி.ஐ கூறியது.
இந்த சம்பவம் ஒரு "தகவல் பரிமாற்ற இடைவெளியால்" ஏற்பட்டது போல் தோன்றியதாகக் கூறும் ஏர் இந்தியா தலைவர் அஷ்வனி லோஹானி, அது குறித்து வேறெதையும் கூறவில்லை.
இந்த விமானம் ஒரு இழுவை வாகனத்தால் அது நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து பின்னோக்கி இழுக்கப்படும்போது நடந்ததாக டைம்ஸ் ஒஃப் இந்தியா செய்தித்தாள் கூறியது.
அரசுக்கு சொந்தமான இந்த விமான நிறுவனம் பெரும் கடனில் இருக்கிறது. மேலும் அது 2007ம் ஆண்டிலிருந்து லாபம் எதையும் ஈட்டவில்லை. இதற்கு முன்பாகவும் பல தொழில்நுட்பச் சிக்கல்கள், தாமதங்கள் மற்றும் விமான ஊழியர்கள் பணிக்குத் தாமதமாக வருவது போன்றவற்றால் பாதிக்கப்பட்டது.
ஏப்ரலில் ஒரு ஏர் இந்தியா விமானம் டில்லியிலிருந்து புறப்படத் தயாராகும் நிலையில், அந்த விமானத்தின் விமானிகள் இருவர் , விமானத்தை இயக்கும் பகுதியான காக்பிட்டிலிருந்தே சண்டையில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட சம்பவத்தை அடுத்து அவர்கள் இருவரையும் ஏர் இந்தியா நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது.
அதற்கு முன்னதாக, 2009ம் ஆண்டில், ஐக்கிய அரபு எமிரேட்டுகளிலிருந்து டில்லி சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் விமானிகளும், விமான ஊழியர்களும் அடிதடியில் ஈடுபட்டனர். அந்த விமனத்தில் 106 பயணிகளும் ஏழு ஊழியர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment