
ஒடுக்கப்பட்ட இனத்தின் விடுதலைக்காக குரல்கொடுத்து, அடிமைப்படுத்தும் ஆட்சியாளர்களிடமிருந்து தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டு, அடிமைத்தனத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டி, போராடி வெற்றிபெற்று இறைதூதராகவும் இறைவனாகவும் உலக மக்களால் மதித்து வணங்கப்படுகின்ற இயேசுகிறிஸ்துவின் பிறந்தநாள் இன்றாகும். இந்த நத்தார் தினத்தன்று உலகெங்கிலும் அப்பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் குறிப்பாக இலங்கைவாழ் மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நத்தார் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்தி ஆனந்தன் வெளியிட்டுள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
தமது தவறுகளை உணர்ந்து, ஏற்றுக்கொண்டு, உளமாற வருந்தி, மனந்திருந்தி மன்னிப்புக்கோரிய அனைவரையும் அவர் மன்னித்தருளினார் என்பது வரலாறு. சர்வதேச அளவில் அவரது வழியைப் பின்பற்றுகின்ற ஆட்சியாளர்கள் அனைவரும் இங்கு ஒன்றைச் சிந்திப்பது பொருத்தமாக இருக்கும். அவரதும் அந்த மதத்தினதும் உண்மையான கொள்கையைப் பின்பற்றி இலங்கைத்தீவின் சமபங்குதாரர்களான தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு அந்த மக்களுடன் ஒன்றிணைந்து செயற்பட்டு எமது இனத்திற்கான உண்மையானதும் நீடித்திருக்கக்கூடியதுமான விடுதலையை வென்றெடுப்பதற்கு சர்வதேச சமூகம் உதவி புரிய வேண்டும்.
நீண்ட காலமாக சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறியவும், தமது சொந்த நிலங்களிலிருந்து துரத்தப்பட்டுள்ள மக்கள் மீளக்குடியேறவும், பிறக்கப்போகும் புதிய ஆண்டிலாவது ஆட்சியாளர்கள் நல்லெண்ணத்தையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்த வேண்டும்.
தமிழ் பேசும் மக்களின் விடுதலையை அல்லது உரிமையை தத்தமது நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரக் கொள்கையுடன் தொடர்புபடுத்தாமல் இயேசு கிறிஸ்துவின் வழியில் வென்றெடுப்பதற்கு சகல சர்வதேச சமூகத்தினரும் முன்வரவேண்டும். இதுவே நத்தார் தினத்தன்று சர்வதேச சமூகத்தினரின் இலங்கை தமிழ் மக்களுக்கான வாழ்த்தாக அமையும் என்று அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவசக்தி ஆனந்தன்
வன்னி பாராளுமன்ற உறுப்பினர்
0 comments:
Post a Comment