
2016ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டத்தில் 306.7 பில்லியன் ரூபாய்கள் (30 ஆயிரத்து 670 கோடி) பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள குறித்த 306.7 பில்லியன் ரூபாய்கள் நிதி இலங்கையின் வரலாற்றில் இதுவரையில் இல்லாத அதியுச்ச ஒதுக்கீடு என்றும் சுட்டிக்காட்டியுள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன்,
இந்த வரலாற்றுச் சாதனையைப் புரிவதற்கு அரசாங்கம் நாட்டு மக்களைக் கடன்காரர்களாக்கியுள்ளதாகவும், எமது மக்களை கடன்காரர்களாக்கி எமது மக்களின் வரிப்பணத்தில் எமது பகுதியில் நிலைபெறச்செய்துள்ள இராணுவத்திற்கான இந்நிதியொதுக்கீட்டை தாம் எவ்வாறு ஆதரிக்க முடியும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
வரவுசெலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு 08.12.2015 அன்று அவர் ஆற்றிய உரையின் முழுவிவரம்:
செல்வந்தர்களை மேலும் செல்வந்தர்களாக்குவதையும் வறியவர்களை மேலும் வறியவர்களாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட இந்த பொது வரவு செலவுத்திட்டத்தைப் போன்றே,
மாகாணங்களுக்கான நிதியொதுக்கீட்டிலும் வருமானம் மிக்க மாகாணங்களுக்கு அதிக ஒதுக்கீடும், நிவாரணத்தை வேண்டி நிற்கின்ற மாகாணங்களுக்கு குறைந்த ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாகாணசபைக்கான நிதியொதுக்கீட்டிலும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் மாற்றாந் தாய் மனப்பான்மையுடனேயே நடத்தப்பட்டுள்ளன.
உதாரணமாக, மேல்மாகாணத்திற்கு 52பில்லியன் ரூபாவும், தென் மாகாணத்திற்கு 33 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
போரில் அனைத்தையும் இழந்து நிர்க்கதியாகி, எஞ்சியுள்ள உயிர்களைக் காப்பதற்காக தமது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப முனையும் வடக்கு மாகாணத்திற்கு 29பில்லியன் ரூபா மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இதே நிலையிலுள்ள கிழக்கு மாகாணத்திற்கும் 26.96 பில்லியன் ரூபா நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது.ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலும் பெரும்பான்மை மீளெழும் செலவினங்களுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது.
வாழ்வாதார உற்பத்திக்கான மூலதனம், மக்களின் வருவாயை உயர்த்தக்கூடிய உட்கட்டமைப்புகள் போன்ற மூலதனச் செலவினங்களுக்கு குறைவான தொகையே ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் 1989ஆம் ஆண்டு அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தத்தினூடாக மாகாணசபைச்சட்டம் இயற்றப்பட்டது. அன்று முதல் இன்றுவரை இந்த நாடு பல ஜனாதிபதிகளையும், பிரதமர்களையும் சந்தித்துவிட்டது.
கடந்த 27ஆண்டுகளில் 13ஆம் திருத்தச்சட்டத்தைக்கூட இந்த நாட்டை ஆட்சி செய்தவர்கள் முழுமையாக அமுல்படுத்த முயலவில்லை.
ஆனால் கடந்த ஆட்சியில் 13ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாணங்களுக்கென்று குறித்தொதுக்கப்பட்ட அதிகாரங்கள் கூட 18ம் திருத்தத்தினூடாக பறித்தெடுக்கப்பட்டுவிட்டது.
இதற்கு சிறந்த உதாரணம் திவிநெகும சட்டமூலம்.
இந்த நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த அரசாங்கம் ஐ.நாவிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வாக்குறுதி அளித்துள்ளது.
அதை நிறைவேற்றுவதற்கு மாகாணங்களுக்கு உரியமுறையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.
நாம் சகோதரத்துவத்துடன் கைகோர்த்து இணையாக நடப்பதையே விரும்புகிறோம். மாறாக, யாரையும் எமது தோள்களில் சுமப்பதற்கு நாம் தயாரில்லை.
எமது தாயகப் பிரதேசத்தில் அதியுச்ச அதிகாரப்பகிர்வுடனான சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றே இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான நிர்ந்தரத் தீர்வாக அமையும் என்பதை இந்த சபையின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.
இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலத்தைவிட அதன் பின்னரான காலப்பகுதிகளில் தொடர்ச்சியாக நாட்டின் பாதுகாப்பிற்கான நிதி அதிகரித்து வந்துள்ளதை நாம் இந்த அவையில் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டி வந்துள்ளோம்.
2011ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின்போது, வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொண்ட ஆயுதங்களுக்கான கடன் தொகையை மீளச்செலுத்த வேண்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
2012ஆம் ஆண்டிற்கான விவாதத்தின்போது, அங்கவீனமடைந்த படைவீரர்களுக்கான மருத்துவ சிகிச்சை, படைவீரர்களுக்கான வீட்டுவசதி மற்றும் அடிப்படை வசதிகளுக்காக என்ற காரணம் முன்வைக்கப்பட்டது.
2013ஆம் ஆண்டிற்கான விவாதத்தின்போது, படையினர் மற்றும் பொலிஸ்துறையைச் சேர்ந்தவர்களுக்கு மூன்றாவது குழந்தை பிறந்தால் ரூபா ஐந்தாயிரம் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது.
2014ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திலும், முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட படைவீரர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் சம்பளம் மற்றும் அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குமாக என்று அறிவிக்கப்பட்டது.
2016ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திலும் 306.7 பில்லியன் ரூபா (30 ஆயிரத்து 670 கோடி) பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இங்கு ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். கடந்த அரசாங்கத்தின் இறுதிப்பகுதிவரை சட்டம் ஒழுங்கிற்கு என்று தனியான ஒரு அமைச்சு இருக்கவில்லை. அது பாதுகாப்பு அமைச்சிடமே இருந்தது.
இப்பொழுது அதற்கான அமைச்சு தனியாக உருவாக்கப்பட்டு அதற்கென 76.9 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பாதுகாப்புத்துறைக்கான ஒதுக்கீடு அதிகரித்திருக்கையில் மேலதிகமாக சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கு என்று தனியாக நிதி ஒதுக்கப்பட்டிருப்பது எத்தகைய சிக்கன நடவடிக்கை என்பதை அரசாங்கம் தான், இந்த சபைக்கும் மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும்.
அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள 306.7 பில்லியன் ரூபா இலங்கையின் வரலாற்றில் இதுவரையில் இல்லாத அதியுச்ச ஒதுக்கீடாகும்.
இந்த வரலாற்றுச் சாதனையைப் புரிவதற்கு அரசாங்கம் நாட்டு மக்களைக் கடன்காரர்களாக்கியுள்ளது. ஒன்பது மாகாணங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள 237.9 பில்லியன் நிதியைவிட பாதுகாப்பிற்கு 67வீதம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
எம்மைக் கடன்காரர்களாக்கி எமது வரிப்பணத்தில் எமது பகுதியில் நிலைபெறச்செய்துள்ள இராணுவத்திற்கான இந்நிதியொதுக்கீட்டை நாம் எவ்வாறு ஆதரிக்க முடியும்?
இந்த நாட்டை யாரிடம் இருந்து பாதுகாப்பதற்காக இவ்வளவு பெருந்தொகையான மக்களின் வரிப்பணம் செலவிடப்படுகிறது? நிச்சயமாக தற்பொழுது வெளிநாட்டில் இருந்து இந்த நாட்டிற்கு எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை.
பெரும்பான்மை மக்களின் நன்மதிப்பையும் ஆதரவையும் உடைய அரசாங்கம் என்றால் மக்களின் பாதுகாப்பிற்கு இவ்வளவு பாரிய தொகை தேவை இருக்காது. சொந்த நாட்டு மக்களிடம் இருந்து தன்னைப் பாதுகாக்க விரும்பும் அரசாங்கம் என்றால் நிச்சயம் இத்தொகை தேவைப்படும்.
ஆனால் அவ்வாறான ஒரு அரசாங்கத்தை மக்களிடம் இருந்து பாதுகாக்கும் தார்மீகக் கடமை எமக்கில்லை. எம்மைத் தெரிவு செய்த மக்கள் அதனை அனுமதிக்கவும் மாட்டார்கள். அதை அனுமதிக்கும் அளவிற்கு அவர்கள் தார்மீகத் தரம் தாழ்ந்தவர்களும் இல்லை.
போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, சொத்திழப்பு, பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட வடக்கு மாகாணத்தில் 53 ஆயிரத்து 241 குடும்பங்களுக்கும், கிழக்கு மாகாணத்தில் 49 ஆயிரம் குடும்பங்களுக்கும் அவர்களது நிரந்தர வாழ்வாதாரத் தேவைகளுக்கு என்று இந்த பட்ஜெட்டில் என்ன திட்டங்களை அறிவித்துள்ளீர்கள்? எவ்வளவு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளீர்கள்?
முறையான மீள்குடியேற்றம், போரினால் அங்கவீனமாக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரம் போன்ற இன்னோரன்ன விடயங்களில் முந்தைய அரசாங்கம் செய்த அதே புறக்கணிப்பையே இந்த அரசாங்கமும் செய்திருக்கிறது.
முந்தைய அரசாங்கம் சர்வாதிகாரமாகச் செய்தவற்றையே இந்த அரசாங்கம் நல்லாட்சி என்ற பெயரில் தொடர்கிறது.
இனப்பிரச்சினைக்கான நிரந்தரத்தீர்வைக் காண்பதைவிடுத்து இந்த நாட்டை மாறிமாறி ஆட்சி செய்தவர்களைப் போன்றே இந்த அரசாங்கமும் பாதுகாப்பைப் பலப்படுத்துவது ஏன்? நல்லாட்சி என்பது பேச்சில் இன்றி செயலில் இருக்க வேண்டும்.
இந்த நாட்டை ஆட்சிசெய்த எந்தவொரு ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொண்டவர்களாக இருந்ததில்லை.
இந்நாட்டின் இனப்பிரச்சினை காரணமாக பல இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் தமது உயிர்களை இழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.
பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் வாழ வழியின்றியிருக்கின்றனர். ஆயிரக்கணக்கான குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிக்கின்றனர். ஆனால் மாகாணசபைக்கான அதிகாரங்கள் பறித்தெடுக்கப்படுகின்றன.
இது சின்னநாடு வடக்கு கிழக்கிற்கு சமஷ்டி அல்லது சுயாட்சி வழங்கினால் நாடு தனியாகப் பிரிந்துவிடும் என்றும், இந்த சிறிய நாட்டில் மாகாணத்திற்கு அதிகாரங்களை வழங்கிவிட்டால் மத்திய அரசாங்கத்திற்கும் மத்திய அமைச்சர்களுக்கும் என்ன வேலை? என்றும் அமைச்சர்களும் அதிகாரிகளும் கேட்கின்றனர்.
நாங்கள் வடக்கு கிழக்கிற்கு மட்டுமே சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வைக் கோருகின்றோம். இந்த நாட்டின் முழுமைக்கும் அதனைக் கொடுப்பதா? வேண்டாமா? என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.
எங்களுக்கு என்ன வேண்டும் என்பதைத்தான் நாங்கள் கேட்க முடியும். இது நாட்டைப் பிளவுபடுத்துவதோ அல்லது நடைமுறைச் சாத்தியமற்றதோ அன்று. அவ்வாறு கூறுவதானது எமக்கு வியப்பையளிக்கின்றது.
திவிநெகும சட்டமூலத்தை இந்த அரசாங்கம் உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும். நல்லிணக்கம் என்பது செயலிலேயே தங்கியுள்ளது.
மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மாகாணசபைகளுக்கு நிதியொதுக்கீடு செய்யப்படுகையில் இந்த வரவு செலவுத்திட்டத்தை எத்தகைய நல்லெண்ண அடிப்படையில் ஆதரிப்பது?
நல்லிணக்கமும் நல்லெண்ணமும் ஒரு தரப்பில் இருந்து மட்டும் வந்தால் போதாது. அது இரண்டு தரப்புக்கும் பொதுவானது.
நாம் எமது நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் சுதந்திரத்திற்கான போராட்டத்திலிருந்து இன்றுவரை வெளிப்படுத்தியே வந்துள்ளோம்.
இந்நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் ஒடுக்குமுறைகளை மற்றொரு பங்குதாரர்களான சிங்கள சகோதரர்களுக்கு எடுத்துச் சொல்லி,
தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை வழங்கி அனைவரும் ஒன்றுபட்டு இத்தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வழிவகைகளைச் செய்ய இந்த அரசாங்கம் முன்வரவேண்டும்.
0 comments:
Post a Comment