தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 25 ஆம் திகதி சனியன்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படும். – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், இதனை எதிர்வரும் 25 ஆம் திகதி யாழ். உடுவில், மருதனார்மடத்தில் நடைபெறும் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்தில் வெளியிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரிக்கும் நடவடிக்கைகளில் கடந்த சில வாரங்களாக ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கும் பணிகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளன.
எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு, யாழ். உடுவில், மருதனார்மடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிரசாரக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
அந்தக் கூட்டத்தில் வைத்து தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுவதற்குக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. முதலாவது பிரசாரக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா (இலங்கைத் தமிழரசுக் கட்சி), சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), த.சித்தார்த்தன் (புளொட்) உட்பட கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மற்றும் கூட்டமைப்பின் மாகாணசபை, உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment